இலங்கை
சனநாயக சோஷலிசக் குடியரசின் 68ஆவது சுதந்திர தினத்தைச் சிறப்பிக்கும் விசேட நிகழ்வுகள்
இன்று (04) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வேதநாயகம்
ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றன.
காலை
8.50 மணிக்கு இடம்பெற்ற தேசியக் கொடியேற்றும் வைபவத்தில் பிரதேச செயலக
உத்தியோகத்தர்களின் பிரசன்னத்துடன் பிரதேச செயலாளர் சுதந்திர இலங்கையின் கௌரவச்
சின்னமான தேசியக்கொடியை ஏற்றிவைத்ததுடன், தேசிய கீதம் இசைக்கப்பட்டு, தாய்
நாட்டுக்காகத் தமது இன்னுயிரை உவந்த தேசிய வீரர்களுக்கும் மரியாதை
செலுத்தப்பட்டது.
தொடர்ந்து
பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் மத்தியில் சுதந்திர தினச் சிறப்புரையாற்றிய
பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், சுதந்திர இலங்கையில் வாழ்ந்துவருகின்ற குடிமக்களாகிய
நாம் ஒவ்வொருவரும் நமது தாய் நாட்டின் அபிவிருத்தியை, அதன் மூலம் நமக்குக் கிடைக்கும்
சுபீட்சமான நல்வாழ்வை கருத்தில்கொண்டு செயற்படவேண்டுமெனக் குறிப்பிட்டதுடன்,
அதற்காக அரச உத்தியோகத்தர்களாகிய நமது அர்ப்பணிப்பு முழுமையான நம்முடைய சேவைகளூடாக
தேவைகளுடன் நம்மை நாடிவருகின்ற, நம்மையொத்த இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சிறப்பாக
வழங்கப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார். இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் நாட்டு
மக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகளை அவர்களிடம் கொண்டுசேர்க்கும் பொறுப்புமிக்க அரச
பிரதிநிதிகள் நாம் என்பதை எப்போதும் மனதில்கொண்டு சேவையாற்றவேண்டுமெனக் கூறியதோடு,
இந்த நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதை ஒவ்வொரு அரச உத்தியோகத்தரதும் தனது தலையாய கடமையாகக்
கொள்வதோடு எமது எதிர்கால சந்ததியினரையும் நாட்டுப்பற்றுள்ளவர்களாக வளர்க்கவேண்டும்
எனவும் அங்கு குறிப்பிட்டார்.
தொடர்ந்து
இந்நாட்டின் 68ஆவது சுதந்திர தினத்தைச் சிறப்பிக்கும்வகையில் பிரதேச செயலாளரின்
தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சம்மேளன
உறுப்பினர்களும், கோளாவில் - 3 அண்ணா இளைஞர் கழக உறுப்பினர்களும் இணைந்து பாரிய
சிரமதானமொன்றைப் பிரதேச செயலக வளாகத்தில் முன்னெடுத்திருந்தனர். இச்சிரமதானத்தை
இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட் ஏற்பாடு செய்திருந்தார்.
இதேபோன்று
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் கிராமமட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
சுதந்திர தின நிகழ்வுகளும், சிரமதானங்களும் ஆலையடிவேம்பு பிரதேசமெங்கும் பரவலாக
இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment