Wednesday, 17 February 2016

தம்பட்டை நெற்களஞ்சியசாலையில் இடம்பெற்ற மகாபோக நெற்கொள்வனவு வைபவம்


திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தம்பட்டை கிராமத்திலுள்ள நெற்களஞ்சியசாலையில் தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ள பெரும்போக நெற்தொகுதியைக் கொள்வனவு செய்யும் உத்தியோகபூர்வ வைபவம் இன்று (17) காலை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி. வணிகசிங்கவின் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் எம்.ஐ.எம்.அமீர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், நெல் சந்தைப்படுத்தும் சபையின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர், திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் விவசாய திணைக்களப் பணிப்பாளர் ஆகியோருடன் திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று பிரதேசங்களிலுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


அங்கு இடம்பெற்ற மும்மதங்களினதும் சமய அனுஸ்டானங்களை அடுத்து குறித்த நெற்களஞ்சியசாலையின் நடவடிக்கைகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய அரசாங்க அதிபர், இந்நெற்களஞ்சியசாலையானது இதுவரைகாலமும் விவசாயிகளுக்கிருந்த சந்தைப்படுத்தும் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைந்துள்ளதோடு திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று பிரதேச விவசாயிகளால் இரண்டு போகங்களிலும் விளைவிக்கப்படும் நெல்லைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி விநியோகிக்கும் கேந்திர நிலையமாகத் தொழிற்படவுள்ளதாகத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து விவசாயத் திணைக்கள அதிகாரிகளும் பிரதேச விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் அங்கு உரையாற்றியிருந்தனர்.

மேலும் பெரும்போக அறுவடையை முடித்த விவசாயிகளிடமிருந்து நிர்ணய விலையில் நெற்கொள்வனவுகள் இன்று முதல் இக்களஞ்சியசாலையில் ஏற்றுக்கொள்ளப்படுவதோடு, அம்பாறை மாவட்டத்தில் வேளாண்மை விவசாயத்தைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயிகள் இதன்மூலம் மேலும் நன்மையடைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.











No comments: