Tuesday, 8 September 2015

அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரத்தில் வைக்கப்பட்ட பிள்ளையார் பதாகைக்கு தீர்வு

கனகராசா சரவணன்.....

அக்கரைப்பற்று, ஸ்ரீ மருதயடி மாணிக்கப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக குடமுழுக்கையை முன்னிட்டு, மணிக்கூட்டுக் கோபுரத்தில் கட்டப்பட்ட பிள்ளையார் உருவ பதாகையினால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து அக்கரைப்பற்று மாநகரசபை ஆணையாளரை இன்று செவ்வாய்க்கிழமை (08) நேரடியாக சந்தித்து தீர்வு கண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தெரிவித்தார். அக்கரைப்பற்று நகரில் பொத்துவில் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மருதயடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் கடந்த கால யுத்ததினால் அழிக்கப்பட்டு 30 வருடங்களின் பின்னர் நிர்மாணிக்கப்பட்டு மகா கும்பாபிஷேக குடமுழுக்கு கடந்த 4ஆம் திகதி ஆரம்பமாகியது.  இந்நிலையில் குறித்த ஆலய உற்சவத்தையிட்டு வீதியை அலங்கரிப்பதற்காக ஆலய நிர்வாகம், வீதி அதிகார சபை மற்றும் பொலிஸாரிடமும் அனுமதி வேண்டியது. அவர்களின் வாய்மூல அனுமதியையடுத்து வீதி மற்றும் மணிக்கூட்டுக் கோபுரத்தையும் சுற்றி பிள்ளையார் உருவம் கொண்ட பதாதைகளும் நந்திக் கொடியும் கட்டப்பட்டன.  பின்னர், 03 தினங்கள் கடந்ததும் அக்கரைப்பற்று மாநகரசபை ஆணையாளர் ஆலய நிர்வாகத்திடம் மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி கட்டப்பட்ட பதாதைகளை அகற்றி, வேறு இடத்தில் அமைக்குமாறு கோரியுள்ளார்.  ஆலய நிர்வாகம் அதனை அகற்ற முடியாது எனத் தெரிவித்ததையடுத்து இனமுறுகல் நிலை ஏற்படும் நிலை தோன்றியது.  எனவே, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தலையிட்டு கிழக்கு மாகாண முதலiமைச்சர் மற்றும் முதலமைச்சரின் செயலாளர், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் கவனத்துக்கு கொண்டுவந்ததுடன் அக்கரைப்பற்று மாநகரசபை ஆணையாளரை மு.இராஜேஸ்வரன் ஆலய நிர்வாகத்துடன் நேரில் சென்று சந்தித்ததையடுத்து மாநகர சபை ஆணையாளர் பதாதைகளை கட்டுவதற்கான அனுமதியை மாநகரசபையிடம் பெறவில்லை எனவும் மணிக்கூட்டுக் கோபுரத்தில் எந்தவொரு மதங்களின் உருவப்படங்கள் வைப்பதற்கு அனுமதியில்லையென தெரிவித்தார்.  மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட பதாதைகளை அகற்றி அதனை அண்மித்த பகுதியில் அமைப்பதாகவும் அதற்கான அனுமதியைத் தருவதாகவும் பேச்சு வார்த்தையில் தீர்வு எட்டப்பட்டதுடன் இவ்விடயத்தை வைத்து சில அரசியல்வாதிகள் தமிழ், முஸ்லிம் மக்களிடையே இன முறுகளை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். எனவே மதவிடயங்களை வைத்து அரசியல் இலாபம் தேட எந்த அரசியல்வாதியும் முயற்சிக்கக் கூடாது என அவர் தெரிவித்தார். 

No comments: