Wednesday, 30 September 2015

‘பிள்ளைகளை உயிர்போல் காப்போம்’

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘பிள்ளைகளை உயிர்போல் காப்போம்’ என்ற தொனிப்பொருளிலான சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கெதிரான விழிப்புணர்வு ஒன்றுகூடல் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன் தலைமையில் இன்று (30) காலை 10.00 மணிக்கு சாகாம வீதி, ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.






இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்து சிறப்பித்ததுடன், ஆரம்ப உரையை நிகழ்த்திய பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் குறித்த நிகழ்வு இடம்பெறுவதற்கான காரணம் குறித்துத் தெளிவுபடுத்தினார்.
அடுத்து இடம்பெற்ற பிரதம அதிதியின் உரையில், பெண் பிள்ளைகளின் பெற்றோர் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்தோடு செயற்படவேண்டுமெனக் குறிப்பிட்டதோடு இந்நிகழ்வில் வழங்கப்படும் துண்டுப்பிரசுரங்களை மாணவர்கள் வீட்டிலுள்ள தமது பெற்றோருக்கும் அயலவர்களுக்கும் கொடுத்து அவர்களையும் படிக்கச்செய்யவேண்டும் என தெரிவித்ததோடு, ஆசிரியர்கள் பெண்பிள்ளைகள் தொடர்பில் விசேட கவனமெடுத்துச் செயற்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அதனைத்தொடர்ந்து குறித்த விழிப்புணர்வு வேலைத்திட்டம் தொடர்பாக அச்சிடப்பட்ட விசேட துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம் இடம்பெற்றதுடன், ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகளும், பிரதேச இளைஞர் கழக உறுப்பினர்களும், ஆலையடிவேம்பு பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

No comments: