Monday, 27 August 2018

வழிமறித்துத் துரத்தித் தாக்கிய காட்டு யானை


மட்டக்களப்பு பெரியபுல்லுமலை அம்பகஹவத்தை காட்டுப் பகுதியில் காட்டு யானை வழிமறித்துத் துரத்தித் தாக்கியதில் அப்பகுதியில் உந்துருளியில் பயணம் செய்து கொண்டிருந்த தாயும் மகனும் படுகாயமடைந்து
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு காவற்துறையினர் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மயிலம்பாவெளியைச் சேர்ந்த 65 வயதான தாயும் 32 வயதான மகனுமே காயமடைந்துள்ளனர்.

இவ்விருவரும் மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய தமது பழைய இடமான அம்பகஹவத்தை கிராமத்திற்குச் சென்று கொண்டிருக்கும்போது வழியில் குறிக்கிட்ட காட்டு யானை இவர்களைத் துரத்தி தாக்கியுள்ளது.

இதனால் உந்துருளியில் பயணித்த இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உந்துருளியில் பின்புறம் அமர்ந்து பயணித்த தாய், யானையின் தும்பிக்கை தாக்குதலில் இடுப்புப் பகுதி பாதிக்கப்பட்ட நிலையிலும் உந்துருளியை செலுத்திச் சென்ற மகன் உடம்பின் பல்வேறு பகுதிகளில் காயம்பட்ட நிலையிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கரடியனாறு காவற்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பகஹவத்தையில் சனிக்கிழமையும் ஜோதி ஜோபட் (வயது 50) என்ற தொழிலாளி மீது காட்டு யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: