Wednesday, 15 August 2018

காணி மீட்புப் போராட்டம்

பொத்துவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ராகம பிரதேச மக்கள், தங்களது குடியிருப்புக் காணியை அரசாங்கம் விடிவித்து வழங்குமாறு கோரி, காணி மீட்புப் போராட்டமொன்றை, ராகம 40ஆம் கட்டையில் இரண்டாவது நாளாக இன்றும் (15) முன்னெடுத்தனர். 
அம்பாறை மாவட்ட காணி மீட்பு அமைப்பும்  அம்பாறை மாவட்ட மீனவர் பேரவையும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் சேனைப் பயிர்ச்செய்கையையும் விவசாயத்தையும் தாம் மேற்கொண்டு வந்திருந்த நிலையில், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக, இம்மக்கள் தெரிவித்தனர்.
இதனால் 350க்கும் மேற்பட்ட தங்களது பயிர்ச்செய்கை நிலங்கள் கைவிடப்பட்ட நிலையில், காடு வளா்ந்து அங்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தெரிவித்தனர்.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பல வருடங்கள் கழிந்தும், நல்லாட்சி அரசாங்கம் தமது ஆதரவுடன் அமைக்கப்பட்ட  பின்னரும், தமது சொந்தக் காணிகளுக்குள் தாம் செல்ல முடியாதவாறு,  வன பரிபாலனத் திணைக்களம் அச்சுறுத்தல் விடுத்து வருவது கண்டிக்கத்தக்க விடயமாகுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
தம்மிடம் காணி உரிமைப் பத்திரம் இருந்தும் தமது காணிக்குள் சென்று பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாத நிலை கவலையளிப்பதாகவும் இதனை பொத்துவில் பிரதேச அதிகாரிகள், அரசியல்வாதிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருந்து வருவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அம்மக்கள் தெரிவித்தனர்.
தமது சொந்த மண்ணில் தம்மைக் குடியமர்த்துங்கள் எனத் தெரிவிக்கும் இம்மக்கள், தமது காணியை மீட்டெக்கும் வரையில் இப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் தெரிவித்தனர்

haran

No comments: