இலங்கைத்
திருநாட்டிலே அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய அரசியல் சட்டமூலத்தை நிறைவேற்றவே நாங்கள் பாடுபட்டு வருகின்றோம். தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளை வழங்கி அவர்களைப் பாதுகாக்கும் அதேவேளை, சிங்கள மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களின் உரிமைகளுக்கு குறைவில்லாத அதிகாரங்களை தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் வழங்கும் வகையில் அச்சட்ட மூலத்தை நிறைவேற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்திற்கான அண்மைய
(19) விஜயத்தின்போது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு
மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும்
வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக அதன் பயனாளிகளுக்கு வாழவாதார
உதவிகளைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், எனது ஆட்சிக்காலத்தில் ஒரு சில வாக்கு வித்தியாசத்தில் அச்சட்டமூலம் நிறைவேற்ற முடியாமல்போனது எனவும், கடந்த காலத்தில் நிறைவேற்ற முடியாமல்போன அச்சட்டமூலத்தை தற்போது நிறைவேற்றி நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு நல்குவீர்கள் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பனங்காடு கிராமத்திற்கு வருகைதந்த அவருக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் இணைந்து மகத்தான வரவேற்பளித்தனர். நாதஸ்வர மங்கள வாத்தியம் முழங்க சிறுவர்களின் வரவேற்பு நடனத்துடன் அங்கு வரவேற்கப்பட்ட அவர், பனங்காடு கேணிக்கரை பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜையிலும் கலந்துகொண்டார்.
தொடர்ந்து ஆலய முன்றலில் நடைபெற்ற மக்கள்
சந்திப்பில் கலந்துகொண்டதன் பின்னர் பனங்காடு நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடியதுடன், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அம்பாறை மாவட்டத்திற்கான அபிவிருத்தி திட்டங்களான
தூவல் நீர்ப்பாசனம், ஆடு வளர்ப்பு போன்ற தொழில்களை மேற்கொள்ளும் மக்களுக்கான வாழ்வாதார பொருட்களையும் கையளித்தார்.
நிகழ்வில் சந்திரிக்கா அம்மையார் பிரதேச செயலாளரினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன், “சமுர்த்தியின் தாய்” என ஆலையடிவேம்பு சமுர்த்தி பிரிவினரால் வடிவமைக்கப்பட்ட நினைவுச்
சின்னத்தினையும் வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய
கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், அம்பாறை மாவட்ட அரச அதிபர் துசித பி. வணிகசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment