Thursday, 21 September 2017

விசேட தேவையுடையோருக்கான மெய்வல்லுனர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிப்பு




அண்மையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் நடைபெற்றுமுடிந்த இவ்வருடத்துக்கான மாகாண மற்றும் மாவட்ட மட்ட விசேட தேவையுடையோருக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் ஆலையடிவேம்பு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தித் திறமைகளை வெளிப்படுத்திய இரண்டு போட்டியாளர்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்று (21) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸனின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலயத்தின் விசேட தேவையுடையோருக்கான பிரிவு மாணவர்களான மகேந்திரன் செரின் மற்றும் விநாயகமூர்த்தி சதுர்சன் ஆகியோர் அங்கு கௌரவிக்கப்பட்டனர்.

முதலில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையோடு கடந்த ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆந் திகதிகளில் நடாத்தப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்தில் வதியும் விசேட தேவையுடையோருக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளின்போது அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலயத்தின் விசேட தேவையுடையோருக்கான பிரிவுப் பொறுப்பாசிரியரான வி.தயாநிதியின் வழிநடத்தலோடு பங்கேற்று, 14 – 18 வயதுக்குட்பட்டோர் பிரிவுக்காக இடம்பெற்ற 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் கலந்துகொண்ட வீராங்கனையான மகேந்திரன் செரின் இரண்டு போட்டிகளிலும் முறையே 3 ஆம் இடங்களைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினைச் சுவீகரித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சமுக சேவைகள் மற்றும் நலனோம்புகை அமைச்சின் அனுசரணையோடு கடந்த செப்டெம்பர் 9 ஆந் திகதி அம்பாறை எச்.எம்.வீரசிங்ஹ மைதானத்தில் இடம்பெற்று முடிந்த அம்பாறை மாவட்ட மட்ட விசேட தேவையுடையோருக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளின்போது 14 – 18 வயதுக்குட்பட்டோர் பிரிவுக்காக இடம்பெற்ற 100 மீற்றர் குறுந்தூர ஓட்டப் போட்டி, குண்டெறிதல் மற்றும் உயரம் பாய்தல் ஆகிய மூன்று போட்டிகளில் கலந்துகொண்ட வீரரான விநாயகமூர்த்தி சதுர்சன் அவற்றில் தொடர்ச்சியாக 2 ஆம் இடங்களைப் பெற்றிருந்ததோடு, 100 மீற்றர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட வீராங்கனையான மகேந்திரன் செரின் அதில் முதலிடத்தைக் கைப்பற்றியிருந்தார்.

அதனடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுக சேவைகள் பிரிவால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இன்றைய நிகழ்வில் அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலயத்தின் விசேட தேவையுடையோருக்கான பிரிவுப் பொறுப்பாசிரியர் வி.தயாநிதியின் தலைமையில் வருகைதந்திருந்த குறித்த இரண்டு வீர வீராங்கனைக்கும் பதக்கங்கள் அணிவித்து, சான்றிதழ்களை வழங்கி, பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
 
இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருடன் உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், கிராம அலுவலர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ மற்றும் சமுக சேவைகள் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான பி.சண்முகநாதன், ஆர்.சிவானந்தம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.










No comments: