இலங்கை
திருநாட்டின் கிழக்கு மாநிலத்தில் அம்பாறை மாநகரில் மூர்த்தி-தலம்-தீர்த்தம் ஆகிய
மகத்துவங்களோடு கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்
திருத்தலத்தில் துர்முகி வருடத்தின் ஆவணித்திங்கள் 10 ஆம் நாளான கடந்த 26-08-2016
வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மஹோற்சவத்தினைச்
சிறப்பிக்கும்வகையில் ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் திருவிழாவானது மஹோற்சவத்தின்
மூன்றாம் நாளான நேற்று (28) உமை மைந்தன் வேழமுகத்து விநாயகனின் அருளோடு
வெகுசிறப்பாக இடம்பெற்றுமுடிந்தது.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸனின் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச
சைவப்பெருமக்கள் கலந்துசிறப்பித்த குறித்த சிறப்புப் பூஜை வழிபாடுகளை ஆலயத்தின் உற்சவகாலப்
பிரதம குரு சிவாகம கிரியாஜோதி சித்தாந்த ஞானபானு சிவஸ்ரீ க.கு. சீதாராம் குருக்கள்
ஆகம விதிகளுக்கிணங்க நடாத்தியிருந்தார்.
ஆலையடிவேம்பு
பிரதேச இந்துமாமன்றப் பிரதிநிதிகள், மகாசக்தி பவுண்டேஷன் அங்கத்தவர்கள் மற்றும் ஆலையடிவேம்பு
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சைவப்பெருமக்கள் அனைவரும் குடும்ப
சமேதராய்க் கலந்துகொண்ட குறித்த திருவிழாவின் அன்னதான வைபவத்தை ஆலையடிவேம்பு
பிரதேச இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் இறைபணிச் செம்மல் ரி.கைலாயபிள்ளை
தலைமையிலான சுவாமி விபுலானந்தா மாணவர் இல்ல நிர்வாகிகள் முன்னெடுத்திருந்தனர்.
குறித்த
மூன்றாம்நாள் திருவிழாவுக்கான பூஜை நிகழ்வுகளில் சாஸ்திர சம்பிரதாயச் சடங்குகளுடன்
சுவாமியின் உள்வீதி ஊர்வலம் பக்தர்களின் சிந்தை குளிரும் தெய்வீக சங்கற்பத்துடன்
நடந்தேறியது அங்கே கண்கொள்ளாக்காட்சியாக விளங்கியது.
இதில்
குறிப்பிடத்தக்க அம்சமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர்
ஆறுமுகம் சசீந்திரன் தலைமையிலான குழுவினரால் நடாத்தப்பட்ட இசையோடு கூடிய விநாயகர் தோத்திரப்
பாடல்கள் அடங்கிய பக்திப் பஜனை நிகழ்வானது அங்கே பக்தர்கள் மத்தியில் சிறப்பிடம் பெற்றிருந்தது.
No comments:
Post a Comment