பசியோடிருப்பவனுக்கு
மீனைக் கொடுக்காமல் மீன் பிடிக்கக் கற்றுக்கொடுங்கள் என்று நம் மூதாதையர்கள்
சொன்னதற்கு ஏற்றாற்போல வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களிலிருந்து
பாடசாலைக் கல்வியை முடித்த பெண் பிள்ளைகளுக்கு தையற்கலைப் பயிற்சிகளை
வழங்குவதன்மூலம் அவர்களது குடும்பங்கள் கௌரவமான ஒரு தொழில் செய்து தமது
ஜீவனோபாயத்தைக் கொண்டு நடாத்த உதவிபுரியும் இவ்வாறான தொழிற்பயிற்சிக் கூடங்கள் அரச
சார்பற்ற நிறுவனங்களின் உதவியோடு எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்னும் பல
தோற்றுவிக்கப்படவேண்டும் என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன்
தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு
பிரதேசத்தின் கோளாவில் - 1 கிராமத்திலுள்ள அம்மன் மகளிர் இல்ல வளாகத்தில் அடித்தளமிடப்பட்ட
நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த தொழிற்பயிற்சி நிலையக் கட்டடத்தின் நிலமாடிக்
கட்டடத்தை இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் மாநகரில் புலம்பெயர் தமிழர்களால்
நிருவகிக்கப்பட்டுவரும் சிவன் அருள் இல்லத்தின் 3.5 மில்லியன் ரூபாய் நிதியுதவியோடு
அமைக்கும் பணிகளின் அங்குரார்ப்பண வைபவத்தில் இன்று (08) காலை பிரதம அதிதியாகக்
கலந்துகொண்டு சுபவேளையொன்றில் அடிக்கல்லை நட்டுவைத்து உரையாற்றும்போதே அவர்
இவ்வாறு தெரிவித்தார்.
அவர்
அங்கு மேலும் பேசுகையில், ஒருவன் தான் கற்ற கல்வி எனும் செல்வத்தை எவ்வாறு அவன்
மரணிக்கும்வரையில் அவனிடமிருந்து பிரிக்கமுடியாதோ, அவ்வாறே ஒருவன் இவ்வாறான தொழிற்பயிற்சிகளூடாகக்
கற்றுக்கொண்ட தொழிற்திறனையும் அவனிடமிருந்து பிரிக்கமுடியாது. ஆகவே, கற்றுக்கொண்ட
திறனைக்கொண்டு ஒருவன் தனது வாழ்க்கையைத் திறம்பட நடாத்திச்செல்வதுபோல துன்பப்படும்
அவனது அயலவனுக்கும் தான் கற்ற திறனைக் கற்றுக்கொடுக்க முனையும்போது அடுத்த சந்ததியும்
அவனால் பயனடையும் நிலை உருவாகும். எனவே திறனைக் கற்றுத்தரும் இவ்வாறான தொழிற்பயிற்சிக்
கூடங்கள் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உருவாவதை நாம் எல்லோரும் இயன்றவரை
ஊக்குவிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேற்படி
வைபவத்தில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி. அனுசியா
சேனாதிராஜா, அம்மன் மகளிர் இல்லத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வாமதேவன், ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளரது வெகுஜனத் தொடர்புகள் உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த்,
முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், இல்ல முகாமையாளர்
எம்.குமுதினி மற்றும் பொருளாளர் திருமதி. கே.ராதிகா ஆகியோருடன் தையற்கலைப் பயிற்சி
ஆசிரியை வி.வியோகானந்தியும் பயிலுனர்களும் அம்மன் மகளிர் இல்ல மாணவிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
அம்மன்
மகளிர் இல்ல வளாகத்தில் இடம்பெற்ற தொழிற்பயிற்சி நிலையக் கட்டடத்துக்கான அடிக்கல்
நடும் வைபவத்தைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சான்றிதழ் வழங்கும்
வைபவத்தில் STA சொலிடாரிட்டி பவுண்டேஷன் நிறுவனத்தின் உதவியோடு கடந்த வருடமும்
இந்த வருட ஆரம்பத்திலும் நடாத்தப்பட்ட தையற்கலைப் பயிற்சிகளை முழுமையாகப்
பூர்த்திசெய்த பெண் பயிலுனர்கள் 32 பேருக்கு பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிதிகளால் அங்கு
சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
புதிய பயிற்சி
நிலையத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பாக பற்றி நியூசுக்குக்/ லங்கா மிறர்ஸ்க்குக்
கருத்துத் தெரிவித்த அம்மன் மகளிர் இல்லத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர்
வி.வாமதேவன், கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தாய் தந்தையரை
இழந்த பெண் பிள்ளைகள் மற்றும் குடும்ப வறுமையால் தமது கல்வியைத் தொடரமுடியாத
மாணவிகளுக்கு அடைக்கலம் வழங்கிப் பராமரித்துவரும் குறித்த அம்மன் மகளிர் இல்லத்தில்
சுனாமி அனர்த்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளுக்குத் தொழிற்பயிற்சிகளைப்
பெற்றுக்கொடுக்கும் நோக்கோடு 2006 ஆம் ஆண்டு தொடக்கம் STA சொலிடாரிட்டி பவுண்டேஷன்
நிறுவனத்தின் உதவியோடு இலவச தையற்கலைப் பயிற்சிகள் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டுவருவதாகத்
தெரிவித்ததுடன் தற்போது அமைக்கப்படவுள்ள பயிற்சி நிலையத்தை எதிர்வரும் 3 மாத
காலப்பகுதிக்குள் விரைவாக அமைத்து புதிய பயிற்சித் திட்டங்களைச் செயற்படுத்தவுள்ளதாகவும்
குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment