Friday, 19 August 2016

தோல்வியையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை மைதானங்களே ஏற்படுத்துகின்றன - ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்


பாடசாலைகளில் தமது ஆரம்பக்கல்வியைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும் முன்னர் சின்னஞ்சிறார்களைச் சமூகத்தோடு இணைக்கும் முக்கிய பணியினை முன்பள்ளிகளே செய்கின்றன. ஆடல், பாடல், விளையாட்டுக்கள் என சிறுவர்கள் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து ஒன்றாக ஈடுபடும்போது அங்கே சகோதரத்துவம், விட்டுக்கொடுப்பு, தோழமையுணர்வு, புரிந்துணர்வு என்பன உண்டாகி அவர்கள் தாம் வாழும் சமூகத்துக்கு இலகுவாக இயைபடையக்கூடிய நிலைமைகள் உண்டாகின்றன என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் குறிப்பிட்டார். 

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கோளாவில் - 1, அம்மன் மகளிர் இல்லத்தினால் நடாத்தப்பட்டுவரும் அம்மன் மற்றும் தாமரை முன்பள்ளிகளுக்கிடையிலான வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்வுகளின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய வளாகத்தில் நேற்று (18) மாலை இடம்பெற்ற குறித்த வைபவத்தில் அவர் மேலும் பேசுகையில், போட்டி என்று வருகையில் அதில் ஒருவர்தான் வெற்றியடையமுடியும். அவ்வாறு வெற்றி பெறும் ஒருவரைப் பாராட்டவும், பங்குபற்றிய ஏனையோரைத் தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கவும் இவ்வாறான மைதானங்களே முக்கிய களமாக விளங்குகின்றன. அங்கு வெற்றிபெற முடியாதவர்கள் தமது பலவீனங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளவும், வெற்றியைப்போலவே தோல்விகளைச் சமமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தையும் கற்றுத்தருகின்றன. ஆகையால் சின்னஞ்சிறார்களை இப்போதிருந்தே இவ்வாறான விளையாட்டுப்போட்டிகளில் ஈடுபடுத்துவதனூடாக அவர்கள் தோழமையுணர்வுடன் கூடிய மனப்பாங்கினை விருத்தி செய்துகொள்ளமுடியும் எனவும் குறிப்பிட்டார்.

அம்மன் மகளிர் இல்லத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வாமதேவன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விளையாட்டுப்போட்டி நிகழ்வுகளுக்கு அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருடன் திருக்கோவில் வலயக் கல்விப் பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.தர்மபாலன், ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், பிரதேச செயலாளரது வெகுஜனத் தொடர்புகள் உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த் ஆகியோருடன், சர்வதேச நிதி வழங்குனர்களான STA சொலிடாரிட்டி நிறுவனத்தின் பிரதிநிதி வி.கமலதாஸ், ஐக்கிய இராச்சியத்தின் HELP தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள் எலிசபெத், லியா, எம்மா மற்றும் அவர்களது பிள்ளைகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

ஒலிம்பிக் தீபமேற்றலோடு ஆரம்பமான மைதானப் போட்டி நிகழ்ச்சிகளில் அம்மன் மற்றும் தாமரை முன்பள்ளிகளின் மாணவச் சிறார்களுக்கிடையிலான தாரா ஓட்டம், போத்தலில் நீர் நிரப்புதல், பணிஸ் சாப்பிடுதல், நிறந்தீட்டுதல், குறுந்தூர ஓட்டம், குளிர்பானம் அருந்துதல், பலூன் உடைத்தல், சாக்கோட்டம் மற்றும் சமநிலை ஓட்டம் போன்ற போட்டிகள் மிகவும் சுவாரசியமாக இடம்பெற்றதுடன், வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களது பிள்ளைகளான சிறார்களும் இப்போட்டிகளில் கலந்துகொண்டு பார்வையாளர்களின் பலத்த கரகோஷங்களைப் பெற்றனர்.

இறுதிப்போட்டி நிகழ்வாக அங்கு இடம்பெற்ற சிறார்களின் தேக அப்பியாசம் கண்ணைக்கவரும் வகையில் மிக அருமையானமுறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததோடு அதிதிகளின் பாராட்டுக்களைப் பெற்றது.

இறுதி வைபவமாக இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து சிறார்களுக்கும் அதிதிகளால் வெற்றிக்கேடயங்களும் பரிசுப்பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டதுடன், அங்கு உரையாற்றிய HELP தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி எலிசபெத், தங்களது எதிர்பார்ப்புக்களுக்கும் மேலாக அருமையானமுறையில் இந்நிகழ்வுகளை வடிவமைத்து தங்களை ஆச்சர்யமூட்டிய குறித்த இரண்டு பாலர் பாடசாலைகளினதும் ஆசிரியைகளைப் பாராட்டியதோடு, திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வாமதேவனின் முயற்சிகளின் பயனாக தமது நிறுவனத்தின் உதவிகள் அம்மன் மகளிர் இல்லத்தினால் செயற்படுத்தப்பட்டுவரும் திட்டங்களுக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவருகின்றமை தொடர்பாகவும் அங்கு குறிப்பிட்டுப் பேசினார்.





















No comments: