Friday, 26 April 2019

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வீடொன்று சோதனைக்கு

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் சிலர், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இன்று(26) ஜலால்தீன் வீதி, அட்டாளைச்சேனை நான்காம் பிரிவில் உள்ள வீடொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.


குறித்த வீட்டினை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பண்டாரவின் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகளும், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கடந்த மூன்று 19ஆம் திகதி குறித்த வீட்டை வாடகைக்குப் பெற்றுக் கொண்டு குடியிருந்த சிலர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்டிருந்ததாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த வீடு நேற்று மாலை முதல் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

வாடகைக்கு பெறப்பட்ட இவ்வீட்டில் ஆறு பேர் அடங்கிய குடும்பமொன்று தங்கியிருந்ததாகவும் அவர்களுள் இரண்டு ஆண்களும், மூன்று பெண்களும், சிறுபிள்ளையொன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் நேற்று (25) அதிகாலை வேளையில் வீட்டிலிருந்து வெளியேறியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வீட்டை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது கணினி ஹாட் டிஸ்க், தகவல் சேகரிப்பு பென் டிரைவர் ஒன்றும் சில சந்தேகத்துக்கிடமான ஆவணங்களும், பொருள்கள் சிலவும் கைப்பற்றப்பட்டன.

குறிப்பிட்ட நான்கு நாள்களுக்குள் தங்கியிருந்த இவர்கள் புதிய பல வீட்டு உபகரணங்கள், புதிய குளிர்சாதனப் பெட்டி போன்ற ஆடம்பரப் பொருள்கள் பலவற்றை கொள்வனவு செய்து பாவித்துள்ளனர். இவர்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்திய வேன் வண்டி தொடர்பாகவும் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
haran

No comments: