கிழக்கு
மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட கராத்தே சுற்றுப்போட்டிகளில் அம்பாறை
மாவட்டத்தின் திருக்கோவில் கல்வி வலய மாணவர்கள் 6 தங்கம் அடங்கலாக 9 பதங்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
திருகோணமலை
மக்கெய்ஸர் உள்ளக விளையாட்டு அரங்கில் கிழக்கு மாகாண உடற்கல்வி உதவிப் பணிப்பாளர்
கே.தர்மதிலக்க தலைமையில் இம்மாதத் தொடக்கத்தில் இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான கராட்டி சுற்றுப்போட்டிகளிலேயே அதிக திறமையினை
வெளிப்படுத்திய திருக்கோவில் கல்வி வலய மாணவர்கள் இவ்வாறு சாதனை படைத்தனர்.
அம்பாறை,
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பாடசாலைகளைச் சேர்ந்த 16, 18 மற்றும் 20
வயதிற்குட்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட கராத்தே
சுற்றுப்போட்டிகளில் திருக்கோவில் கல்வி வலயம் 6
தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது.
16
வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான காட்டா போட்டியில் அக்கரைப்பற்று திருநாவுக்கரசு
வித்தியாலய மாணவன் பி.மதன்ராஜ் தங்கப் பதக்கத்தை வென்றதுடன் குமிற்றிப் போட்டியிலும்
தங்கம் வென்றார்.
18
வயதிற்குட்பட்ட காட்டா போட்டியில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஸ்ணா தேசிய பாடசாலை
மாணவன் எஸ்.ரிசோபன் தங்கம் வென்ற அதேநேரம் குமிற்றிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தைப்
பெற்றுக் கொண்டார். குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் பி.சரோன் சச்சின் என்ற
மாணவன் 20 வயதிற்குட்பட்ட காட்டா போட்டியில் தங்கப்
பதக்கத்தினைச் சுவீகரித்துக் கொண்டார்.
20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான காட்டா போட்டியில் அக்கரைப்பற்று இராம கிருஸ்ண
மிசன் மகா வித்தியாலய மாணவி கே.அட்சயா வெள்ளிப் பதக்கத்தினைப் பெற்றதுடன், வை.
லக்ஷாஜினி என்ற மாணவி வெண்கலப் பதக்கத்தினைப் பெற்றிருந்தார்.
இதேநேரம்
ஆண்களுக்கான காட்டா குழுப் போட்டியில் தங்கப் பதக்கமும் குமிற்றி குழுப் போட்டியின்
அரையிறுதி ஆட்டத்தில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியைத் தோற்கடித்த திருக்கோவில் கல்வி வலய
மாணவர்கள் இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையுடன் மோதி
தங்கப் பதக்கத்தினையும் பெற்று திருக்கோவில் வலயத்திற்குப் பெருமை சேர்த்தனர்.
கடந்த
2017 ஆம் ஆண்டில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஸ்ணா
தேசிய பாடசாலை மாணவன் எஸ்.ரிசோபன் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய கராத்தே
சுற்றுப்போட்டியின்போது குமிற்றி போட்டியில் வெள்ளிப் பதக்கமும் காட்டாவில்
வெண்கலமும் வென்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்திருந்ததுடன், 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற காட்டா போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த
மாணவர்களுக்கான பயிற்சியினை ஆலையடிவேம்பு ராம் கராத்தே சங்கத்தின் பிரதம
போதனாசிரியர் சிகான் கே.கேந்திரமூர்த்தி தலைமையிலான கென்சி கே.சாரங்கன், கென்சி கே.ராமிலன் ஆகியோர் வழங்கி திருக்கோவில் கல்வி வலய
மாணவர்களின் இம்மகத்தான சாதனைக்கு வழிகோலியிருந்தனர்.
வெற்றி
பெற்ற மாணவர்களுக்கு திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.கே.புள்ளநாயகம்
உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் கல்விச் சமூகத்தினர் தமது தொடர்ச்சியான பாராட்டுக்களைத்
தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment