Monday, 26 February 2018

முன்பள்ளி ஆசிரியைகள் கௌரவிக்கப்படவேண்டியவர்கள்.




அரச பாடசாலை ஒன்றில் தரம் – 1 இல் சேர்க்கப்படுகின்ற ஒரு பிள்ளை எவ்வளவு செயற்திறனுடன் அங்கு தனது ஆரம்பக் கல்வியைத் தொடரும் என்பது அந்தப் பிள்ளை தனது பாலர் கல்வியைக் கற்ற முன்பள்ளியின் செயற்திறன் மிக்க கற்பித்தல் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது. அந்தவகையில் அவ்வாறான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் உங்களைப் போன்ற முன்பள்ளி ஆசிரியைகளின் அர்ப்பணிப்பு மிக்க சேவை உண்மையிலேயே கௌரவிக்கப்படவேண்டிய ஒன்று என்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் குறிப்பிட்டார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலர் பாடசாலைகளில் சேவையாற்றி பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திச் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக முன்னெடுத்துச் செல்வதில் பங்கெடுப்பதுடன், ஆலையடிவேம்பு பிரதேச முன்பள்ளிச் சிறார்களின் நலன்களுக்காகத் தமது அயராத உழைப்பினையும் வழங்கிவரும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியைகளின் பணிகளை வாழ்த்தி கௌரவிக்கும் வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், முன்பள்ளிச் சிறார்கள் என்பவர்கள் எமது கையிலிருக்கும் பதப்படுத்தப்பட்ட களி போன்றவர்கள். அந்தக் களியை நாம் சிலையாக்கினால் அவர்கள் ரசிக்கப்படுவார்கள். சீர்குலைத்தால் ஒதுக்கப்படுவார்கள். எனவே அவர்கள் எமது சமுகத்தில் என்ன பாத்திரத்தை வகிக்கப் போகின்றார்கள் என்பது நமது கைகளிலேயே தங்கியுள்ளது. நமது வீடுகளில் இருக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் எந்தளவு சுட்டித்தனமானவர்கள் என்பது பெற்றோராகிய எமக்குத் தெரியும். அவர்களது சுட்டித்தனமான செயற்பாடுகளால் நமது குடும்பத்திலும் சமூகத்திலும் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலைகளை அன்றாடம் எதிர்கொள்கிறோம் என்பது ஒன்றும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் அவற்றைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் எப்போது பிள்ளைக்கு மூன்று வயதாகும். நேர்சரிக்கு அனுப்பிவிட்டால் தொல்லை தீரும் என்ற மனநிலைக்கு இன்றைய காலத்துப் பெற்றோர்கள் வந்துவிடுகிறார்கள். சிலர் பாலர் பாடசாலைக்குச் செல்ல மறுக்கும் தனது பிள்ளையை அடித்து இழுத்துக்கொண்டு வந்து விட்டுவிட்டுப்போன செய்திகளையும் கடந்த காலங்களில் நான் அறிந்திருக்கின்றேன். நமது ஒரு பிள்ளையைப் பராமரிக்கவே நாம் இவ்வளவு கஸ்டப்படும்போது இவ்வாறான சுமார் இருபது பிள்ளைகளை ஒரே வகுப்பறைக்குள்ளும் வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்ட ஒரு பாலர் பாடசாலை வளாகத்துக்குள்ளும் தினமும் மூன்று மணித்தியாலங்கள் வைத்துப் பராமரித்து, அவர்களுக்குப் பாலர் பாடல்களையும் விளையாட்டுக்களையும் கற்பித்து, எமது சமய அனுஸ்டானங்கள், நமது கலாசாரப் பாரம்பரிய விழுமியங்கள் தொடர்பாக அறிவூட்டி, அவர்களை எமது சமுக நன்னடத்தை கற்பிதங்களுக்குள் உள்வாங்கி, பெரியவர்களை மதித்து, ஆசிரியர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கற்றுக்கொடுப்பதென்பது அப்பப்பா! எண்ணும்போதே எமக்குக் கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்குகிறது. இவற்றையெல்லாம் ஒரு பாடசாலையில் செயற்படுத்துவது என்பது எவ்வளவு பெரிய காரியம். தமது உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கப்பெறாத போதிலும் அத்தனை பொறுப்புக்களையும் தமது தலைமேல் சுமந்துகொண்டு தினமும் கத்தி மீது நடந்து அவற்றை செவ்வனே நிறைவேற்றும் முன்பள்ளி ஆசிரியைகளின் சேவையைப் பாராட்டிக் கௌரவிக்கவேண்டியது எம் ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகும்.

இது தொடர்பில் எமது பிரதேச செயலகத்தின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் என்னிடம் கலந்தாலோசித்தபோது இவ்வாறானதொரு நிகழ்வை அவசியம் செய்யவேண்டுமென்று முடிவெடுத்தோம். எனினும் இவ்வாறான ஒரு நிகழ்வு தொடர்பில் அமைச்சு மட்டத்திலிருந்து நிதி ஒதுக்கீடுகள் எதுவும் இல்லாத நிலையில் பொதுத் தொண்டு நிறுவனங்களின் அனுசரணையோடு இந்நிகழ்வைச் செய்வதென்ற முடிவுக்கு வந்தோம் எனக் குறிப்பிட்டதோடு, முன்பள்ளி ஆசிரியைகளின் நியாயமான கோரிக்கையை அரசாங்கம் செவிமடுத்து, மிக விரைவில் அவர்கள் அனைவரையும் மாதாந்த ஊதியம் பெறுகின்ற அரசாங்க ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க வேண்டுமென்ற எனது விருப்பத்தையும் இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் அங்கு உரையாற்றுகையில், எல்லாக் காலங்களிலும் எமது அமைச்சினூடாக முன்பள்ளி ஆசிரியைகளுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், பயிற்சிகள், ஒன்றுகூடல்கள் மற்றும் கூட்டங்களை நடாத்தி அவர்களின் செயற்திறன் விருத்தி மற்றும் சிறார்களின் கல்வி நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான விடயங்களையே பிரதானமாகக் கொண்டு செயற்பட்டு வந்திருக்கின்றோம். எனினும் எமது பிரதேச செயலாளர் இங்கே தெரிவித்ததைப் போன்று அவர்களது அர்ப்பணிப்பு மிக்க சேவையைக் கௌரவிக்கும் வகையிலான எந்தவொரு செயற்பாடுகளும் இதுவரை இடம்பெற்றதில்லை. எனவே இந்த வருடம் முதல் இவ்வாறான ஒரு விழாவைச் செயற்படுத்த எமது பிரதேச செயலாளர் உடனடியாக ஒப்புதலளித்திருந்த நிலையில் அதற்கான நிதியின்மை ஒரு பாரிய சவாலாக அமைந்தது. அந்த நேரத்திலேயே எனது தனிப்பட்ட நண்பரும், சுவிஸ் நாட்டின் நிதியுதவியோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கல்வி மேம்பாடு, தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் STA சொலிடாரிட்டி பவுண்டேஷன் நிறுவனத்தின் இணைப்பாளருமான வாமதேவனைத் தொடர்புகொண்டு கலந்தாலோசித்த வேளையில் எமது கோரிக்கையை முழு மனதோடு ஏற்று, இந்நிகழ்வை இன்று இங்கு நடாத்துவதற்குப் பூரண நிதி அனுசரணையை வழங்கியதுடன், குறித்த தொண்டு நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட ஆலோசகர்களாகச் செயற்படும் சுவிஸ் நாட்டுப் பிரஜைகளான திரு. எரஸ்ட் வெபர் மற்றும் அவரது பாரியாரும் இலங்கையில் பிறந்தவருமான திருமதி. ரெபேக்கா வெபர் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்து இந்த விழாவை மேலும் சிறப்பாக்கியுள்ளார் எனக் கூறியதுடன், இவ்வாறான அவரது சேவைகள் மேலும் தொடர வாழ்த்தி ஓர் வாழ்த்துப் பாவினையும் கையளித்திருந்தார்.

அவரைத் தொடந்து அங்கு பேசிய STA சொலிடாரிட்டி பவுண்டேஷன் நிறுவனத்தின் இணைப்பாளரும் அம்மன் மகளிர் பராமரிப்பு நிலையத்தின் பணிப்பாளருமான வி.வாமதேவன், எமது STA சொலிடாரிட்டி சமுக சேவைகள் நிதியத்தினூடாக ஒரு மகளிர் பராமரிப்பு நிலையம், பாடசாலைக் கல்வியை முடித்த இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் இரண்டு பாலர் பாடசாலைகளை நிருவகித்து வருபவன் என்றவகையில் முன்பள்ளி ஆசிரியைகளின் அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை நான் நன்கு அறிந்துவைத்துள்ளேன். எமது நிறுவனத்தின் வேலைத்திட்டங்களினூடாக இவ்வாறானதொரு நிகழ்வை நடாத்த எண்ணியிருந்த சமயத்திலேயே நண்பர் உஜெயந்தன் என்னைத் தொடர்புகொண்டு இவ்வைபவம் தொடர்பாகப் பேசியிருந்தார். எனவே இங்கு வருகை தந்திருக்கும் எமது நிதியத்தின் இலங்கைக்கான திட்ட ஆலோசகர்கள் இருவரையும் சந்தித்து அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டதோடு இந்நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு கேட்டிருந்தேன். எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டமைக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இக்கௌரவத்தைப் பெற வந்திருக்கும் அனைத்து முன்பள்ளி ஆசிரியைகளையும் வாழ்த்துவதாகவும் அங்கு தெரிவித்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து குறித்த நிகழ்விற்கான சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக வருகை தந்திருந்த திருமதி. ரெபேக்கா வெபர் நிகழ்வில் கலந்துகொண்ட முன்பள்ளி ஆசிரியைகளுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து ஆலையடிவேம்பு பிரதேச முன்பள்ளி அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு முன்னின்று தலைமைதாங்குவதுடன், சிறந்ததொரு ஆலோசகராகவும் செயற்பட்டுவரும் பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸனின் பணிகளைப் பாராட்டி மற்றுமொரு வாழ்த்துப் பாவினை முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் அங்கு வழங்கிவைத்தார்.

இறுதியாக குறித்த கௌரவிப்பு நிகழ்வு தொடர்பாக ஆசிரியைகள் சிலரது கருத்துக்கள் அங்கு கேட்டறியப்பட்டதுடன், பிரதேச செயலாளர் தலைமையிலான அதிதிகளால் முன்பள்ளி ஆசிரியைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டன.




















No comments: