Tuesday, 6 February 2018

அளிக்கம்பை புனித சவேரியார் வித்தியாலயத்துக்கு புதிய தளபாடங்களும் நீர்த் தாங்கிகளும் வழங்கிவைப்பு




ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அளிக்கம்பை, தேவகிராமத்திலுள்ள புனித சவேரியார் வித்தியாலயத்துக்கு ஒரு தொகுதி புதிய தளபாடங்களையும், நீர்த் தாங்கிகளையும் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு இன்று (06) காலை இடம்பெற்றது.

அதிபர் எஸ்.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின்போது, திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட பொருளாதார வசதிகள் குறைந்த அதிகஸ்டப் பிரதேசப் பாடசாலையும், அளிக்கம்பை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையாக இருந்து பாடசாலைச் சமுகம் சார்ந்த பெற்றோர் மற்றும் பொதுமக்களின் விருப்பின் பேரில் புனித சவேரியார் வித்தியாலயம் என அண்மையில் பெயர் மாற்றம் பெற்றிருந்த தரம் C வகைக்குட்பட்ட குறித்த பாடசாலையில் நெடுங்காலமாக நிலவிவந்த தளபாடங்களுக்கான பற்றாக்குறை மற்றும் குடிநீர்ப் பிரச்சனைகள் தொடர்பாக அதிபரால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கமைவாக, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களால் ஐக்கிய இராச்சியத்தில் நிருவகிக்கப்பட்டுவரும் இலாப நோக்கற்ற பொதுத்தொண்டு அமைப்புக்களான செரண்டிப் மற்றும் இரத்தினம் பவுண்டேஷன் ஆகியவற்றின் உதவியோடு ஆலையடிவேம்பில் தொழிற்படும் சிவன் அருள் அறக்கட்டளை நிதியம் மற்றும் அம்மன் பவுண்டேஷன் என்பவற்றினூடாகத் தருவிக்கப்பட்ட சுமார் மூன்று இலட்ச ரூபாய்கள் பெறுமதியான ஒரு தொகுதி புதிய தளபாடங்களும், லண்டன் ஈலிங் நகர அருள்மிகு ஸ்ரீ கனகதுர்க்கை ஆலய நிதியத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நீர்த் தாங்கிகளும் அங்கு அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸனும், கௌரவ விருந்தினராக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் சிவன் அருள் நிதியத்தின் தலைவியுமான அனுசியா சேனாதிராஜாவும், சிறப்பு விருந்தினர்களாக சிவன் அருள் நிதியத்தின் செயலாளரும் அம்மன் பவுண்டேஷனின் தலைவருமான வி.வாமதேவனும், சிவன் அருள் நிதியத்தின் நிருவாக உத்தியோகத்தர் திருமதி. நியோமி ரமேஷ் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச முன்பிள்ளைப் பராய அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தனும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

















No comments: