Monday, 5 October 2015

அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளின் கோரிக்கைகளையும் உண்ணாவிரத போராட்டங்களையும் கொச்சைப்படுத்தி தட்டிக்கழிக்க முயற்சிக்க கூடாது

அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளின் கோரிக்கைகளையும் உண்ணாவிரத போராட்டங்களையும் கொச்சைப்படுத்தி தட்டிக்கழிக்க முயற்சிக்க கூடாது--தலைவர் எம்.திலீபன் 


கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் வழங்கப்பட்டுள்ள அரச தொழில் நியமனங்களில் தமிழர்களின் இன விகிதாசாரத்தை விட அதிகமான தொழில் வாய்ப்புக்களை அரச திணைக்களங்களில் வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையால் தெரிவிக்கப்படுகின்றது.

இதை காரணம் காட்டி அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளின் கோரிக்கைகளையும் உண்ணாவிரத போராட்டங்களையும் கொச்சைப்படுத்தி தட்டிக்கழிக்க முயற்சிக்க கூடாது என அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளின் சங்கத் தலைவர் எம்.திலீபன் தெரிவித்தார். 

திருகோணமலையில் தொடர்ந்து 6ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டத்தின் நோக்கம் பற்றி இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளாகிய நாம் எமக்கு மாத்திரம் தொழில் கிடைக்க வேண்டுமென்று இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவில்லை.எதிர்காலத்தில் தமிழ் மாணவர்கள்  பல்கலைக்கழகங்கள் சென்று அங்கு பட்டத்தினைப் பெற்று வந்து இவ்வாறு வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி அரச தொழில்களைப் பெற வேண்டிய இந்த சீரழிவான கலாசாரம் மாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். கல்வியியல் கல்லூரிகளில் தமது படிப்பினை முடித்து தொழிலுடன் வீட்டுக்கு திரும்புவது போன்று பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பினை முடித்து வீடு திரும்பும் போது தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எதிர்காலத்தில் தமது திட்டங்களில் முன்னெடுக்க வேண்டும். தொடர்ந்து இந்நிலைமைகள் காணப்படுமிடத்து பல்கலைக்கழகங்களில் கல்விக் கற்று பட்டத்தினை பெறுகின்ற பட்டதாரிகளின் மனநிலைகளில் ஒரு தாழ்வுச் சிக்கல்களை ஏற்படுத்துவதுடன் பல்கலைக்கழக கல்வியையும் பட்டத்தினையும் ஏனைய துறைகள் ஊடாக தொழிலைப் பெறுகின்றவர்கள் இழிவாக நோக்கும் நிலைமையும் ஏற்படும் என்றார். மேலும்,இந்நிலைமைகள் மாற்றப்பட வேண்டும்.அத்துடன் தமிழ்ப் பட்டதாரிகளுக்கான கௌரவங்களை கொடுத்து தாம் தொடர்ந்து இவ்வாறு வீதிகளில் நின்று தொழில் பெறும் கலாசாரம் நீக்கப்பட்டு நியாயமான முறையில் திறமைகளின் மூலமாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள அரசு சந்தர்ப்பங்களை வழங்குவதுடன் எமது இந்த உண்ணாவிரத போராட்டமே இறுதியான போராட்டமாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments: