Friday, 2 October 2015

இலங்கைக்கான ஜப்பான் கராத்தே-டோ மருயோஷிகாய் சங்கம் ஏற்பாடு செய்துள்ள பயிற்சிப் பட்டறை




இலங்கைக்கான ஜப்பான் கராத்தே-டோ மருயோஷிகாய் சங்கம் ஏற்பாடு செய்துள்ள ஆலையடிவேம்பு பிரதேச வீரர்களுக்கான நான்கு நாள் சர்வதேச கராத்தே பயிற்சிப் பட்டறை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இன்று (02) காலை ஆரம்பமாகியுள்ளது.

இலங்கைக்கான ஜப்பான் கராத்தே-டோ மருயோஷிகாய் சங்கத்தின் தலைவி கே.சஷித்ரா லக்மினி ராமச்சந்திரனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த பயிற்சிப் பட்டறை கிழக்கு மாகாண JKMO பிரதம போதனாசிரியர் சென்சி கே.கேந்திரமூர்த்தி தலைமைமையில் கறுப்புப்பட்டி தரம்பெற்ற சுமார் 50 வீர, வீராங்கனைகளுக்கான பயிற்சி மையமாக இது அமையப்பெற்றுள்ளது.

ஆலையடிவேம்பு பிரதேச வரலாற்றில் முதன்முறையாக ஜப்பான் நாட்டு சர்வதேசப் புகழ்பெற்ற JKMO பயிற்றுவிப்பாளர் கிரான்ட் மாஸ்டர் ஷிஹான். சசாகி டொஷியட்சு மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த சென்சாய். சசாகி ஷுன்சுகே, சென்சாய். யமடா கெஞ்சி, சென்சாய். இஷிடா சுயோஷி ஆகியோர் பயிற்றுவிப்பாளர்களாகக் கலந்துகொண்டுள்ள இப்பயிற்சிப் பட்டறையின் உத்தியோகபூர்வத் தொடக்க விழாவுக்குப் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனும், கௌரவ அதிதியாக திருக்கோவில் கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி.குணாளனும் கலந்து சிறப்பித்தார்கள்.

இத்தொடக்க விழாவில் தமிழர் பாரம்பரிய மங்கள வாத்திய இசையோடு வரவேற்கப்பட்ட அதிதிகள் மங்கல விளக்கேற்றி குறித்த பயிற்சிப் பட்டறையை ஆரம்பித்துவைத்தார்கள். இதன்போது கடந்த வருடம் இயற்கையெய்திய முன்னாள் இலங்கை ஷோட்டோக்கன் கராத்தே சங்கத்தின் தலைவரும், JKMO பிரதம போதனாசிரியருமான ஷிஹான். கே.ராமச்சந்திரனுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அடுத்து ஜப்பான் கராத்தே-டோ மருயோஷிகாய் சங்கத்தின் தலைவி, திருக்கோவில் கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆகியோரின் சிறப்புரைகள் இடம்பெற்றதுடன், பாரம்பரிய பரதநாட்டியக் கலை நிகழ்வும் இடம்பெற்றது.

தொடர்ந்து இடம்பெற்ற சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கடந்த வருடம் கராத்தே-டோ மருயோஷிகாய் பயிற்சிகளில் உயர் தராதரங்களைப் பூர்த்திசெய்த வீர, வீராங்கனைகள் ஜப்பானிய கிரான்ட் மாஸ்டர் ஷிஹான். சசாகி டொஷியட்சுவிடமிருந்து பாராட்டுக்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.

இன்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (05) வரை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நடைபெறவுள்ள குறித்த பயிற்சிப் பட்டறை தினமும் நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு காலை 8.30 முதல் இரவு 7.30 வரை இடம்பெறவுள்ளதாகக் குறிப்பிட்ட கிழக்கு மாகாண JKMO பிரதம போதனாசிரியர் சென்சி கே.கேந்திரமூர்த்தி, எமது பிரதேசத்தில் இவ்வாறானதொரு பயிற்சி நிகழ்வு சர்வதேசத் தரத்திலான பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு நடாத்தப்படுவது உண்மையிலேயே எமது வீரர்களுக்குக் கிடைத்ததொரு மிகப்பெரிய கௌரவமும் வரப்பிரசாதமுமாகும் எனவும் குறிப்பிட்டார்.

No comments: