Wednesday, 28 October 2015

மரநடுகை வேலைத்திட்டங்கள்

பிரேம்....
தேசிய சுற்றாடல் பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இம்மாதம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் ஓரங்கமாக சிரமதானப் பணிகள், விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் மற்றும் மரநடுகை வேலைத்திட்டங்கள் என்பன அக்கரைப்பற்று - 9, ஆலையடிவேம்பு, நாவற்காடு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும், ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக்கழக மைதானத்திலும் இன்று (23) காலை முன்னெடுக்கப்பட்டன.

முதலில் ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்ற மரநடுகை வைபவத்தில் பிரதேச செயலாளரும் விளையாட்டுக்கழக அங்கத்தவர்களும் இணைந்து நீண்டகாலப் பயன்தரும் நிழல் மரங்களை நட்டுவைத்தனர். அதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்று - 9, ஆலையடிவேம்பு, நாவற்காடு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும் சிரமதானங்கள் மற்றும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளோடு இணைந்தவகையிலான மரநடுகை வைபவங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த வேலைத்திட்டங்களில் பிரதேச செயலகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, அபிவிருத்தித் திட்ட உதவியாளர் சித்தீக் றஸ்மி, விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிஷந்தன் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் பிரதேசப் பொதுமக்களும் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

குறித்த கிராமசேவகர் பிரிவுகளில் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட சிரமதானங்களோடு ஆரம்பமான வேலைத்திட்டங்களில் பிரதேச செயலாளரும் ஏனைய அதிகாரிகளும் பங்கெடுத்ததுடன், அடுத்து ஒழுங்குசெய்யப்பட்டிருந்த ஒன்றுகூடல்களின்போது நாடு முழுவதும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் தேசிய சுற்றாடல் பாதுகாப்பு மாத வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், மரநடுகையின் பொருளாதார, சமுக முக்கியத்துவங்கள் தொடர்பாகவும் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தினர்.

No comments: