சிறுமியின் பொதுச்சுடருடன் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
Niloch.K
முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் நடைபெற்றது .
தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டு யுத்தம் நிறைவுக்கு வந்த நாளான 2009 மே 18 ஆம் திகதியன்று தமிழ் மக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக வருடம் தோறும் நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் யுத்தம் நிறைவடைந்து பத்தாவது ஆண்டு நிறைவடைகின்ற நிலையில் நாட்டில் அவசரக்கால சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் படையினர் மற்றும் புலனாய்வாவார்களின் தீவிர கண்காணிப்புகளுக்கு மத்தியில் இம்முறையும் முள்ளிவாய்க்கால் தமிழின பேரவல நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றன.
சிறப்பாக இவ்வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் (வடக்கு கிழக்கு ) ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு நேர்த்தியாக நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தது
அந்த வகையில் இன்றைய தினம் தமிழினப் படுகொலை 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் காலை பத்து முப்பது மணிக்கு அக வணக்கத்தோடு ஆரம்பித்துத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் தனது தாய் இறந்துகிடப்பதை கூட அறியாது அந்த தாயின் மார்பில் பால் குடித்தும் அவ்வேளையில் தனது ஒரு கையை இழந்த சிறுமி ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து மக்களால் உயிரிழந்தவர்களுக்காக நினைந்துருகி சுடர்கள் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழினப் படுகொலை நாளான மே 18 பிரகடனம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். சர்வமத தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் மக்களோடு மக்களாக நின்று உயிரிழந்த உறவுகளுக்காகச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
இந்த நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு மக்கள் உணவாக உட்கொண்டு பசிபோக்கிய முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் , பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா ,சிவமோகன் ,சிவசக்தி ஆனந்தன் ,சாள்ஸ் நிர்மலநாதன் ,செல்வம் அடைக்கல நாதன் , முன்னாள் மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் , சிவநேசன் ,ஐங்கரநேசன் ,முன்னாள் மாகாசபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் ,ரவிகரன் ,கமலேஸ்வரன் ,புவனேஸ்வரன் ,சயந்தன் .கஜதீபன் ,யாழ் மாநகர மேஜர ஆர்னோல்ட் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர் .
No comments:
Post a Comment