haran
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்ட நபர்களுடன் நேரடி மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளைப் பேணியவர்கள் என இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 75 பேர் தமது தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து நேற்று (28) தத்தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர் என அடையாளம் காணப்பட்டு சுகம் பெற்ற ஒருவரும் தமது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.
இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வீடு திரும்பியவர்களுள் அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கான இரண்டாவது நபர் என அடையாளம் காணப்பட்ட பெண் ஒருவரும் அடங்குகின்றார். இதனால் அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இருவரும் பூரண சுகம் பெற்று தமது இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் சுகம் பெற்று வீடு திரும்பிய குறித்த பெண் அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர் என அடையாளப்படுத்தப்பட்ட முதலாவது நபரின் மனைவியாவார். இவர் வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் அறிக்கைகள் கிடைக்கப் பெற்றதனைத் தொடர்ந்து இவரது மருத்துவ அறிக்கை நெகடிவ் என வெளியிடப்பட்டதனால் இவர் சுகம் பெற்ற வகைப்படுத்தலின் கீழ் தனது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்நபரும் ஏனைய தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்த 75 பேரும் கொரோனா தொற்று நோய் தடுப்பு செயற்பாட்டிற்கு அமைவாக ஏப்ரல் 28 முதல் மே 11 ஆம் திகதி வரை 14 நாட்கள் கட்டாய தனிமைப் படுத்தலுக்கு உட்பட வேண்டுமென அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இம்மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இருவருடன் நேரடி மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளைப் பேணியவர்கள் என இனங்காணப்பட்டு பொலன்னறுவை தமின்ன தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 85 பேரில் 75 பேர் இன்றைய தினம் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் சிறிய குழந்தையொன்றும் அடங்குகின்றது.
கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் என இனங்காணப்பட்ட இருவரின் நேரடித் தொடர்பினைப் பேணி வந்தவர்கள் ஒன்பது பேர் இன்னும் தம்மின்ன தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து வருகின்றனர்.
No comments:
Post a Comment