Wednesday, 20 December 2017

அவசர உணவுக் கலாசாரத்துக்கு அடிமைப்பட்டு அவஸ்தைப்படும் சந்ததி ஒன்றையே இன்று நாம் உருவாக்கி வைத்திருக்கின்றோம். - ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீஸன்.

பிரேம் ...
அடுத்தவர்கள் எம்மைக் குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள். அதனால் எம் அந்தஸ்து குறைந்துவிடும் என்ற குறுகிய மனப்பான்மையுடனேயே நாம் எமது இல்லத்து நிகழ்வுகளிலும் சரி, எமது பண்பாடு மற்றும் கலாசாரங்களோடு தொடர்புபட்ட எந்த நிகழ்வானாலும் சரி, இன்றைய நாகரிக யுகத்துக்குத் தகுந்த அவசர உணவுகளோடு அவற்றைக் கொண்டாட நினைக்கின்றோம். எதற்கெடுத்தாலும் பிரியாணி என்கிற செயற்கைச் சுவையூட்டிகளையும் நமக்கு நன்கு பரிச்சயமான மொனோசோடியம் குளுடமேட் என்ற விஞ்ஞானப் பெயரையுடையதும், மனித உடலுக்குப் பாதகமான புற்றுநோயை உண்டாக்கக்கூடிய இரசாயனக் கலவைகளைக் கொண்டதுமான அஜினமோடோ பாவிக்கப்பட்ட உணவுகளையும் எமது உணவுக் கலாசாரமாக மாற்றி வைத்திருக்கின்றோம் என்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தெரிவித்தார்.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய உணவுக் கண்காட்சி மற்றும் போட்டி நிகழ்வில் இன்று (20) பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. நவப்பிரியா பிரசாந்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமக்கு முந்திய தலைமுறையினர் தமது வீட்டுக் காணிகளிலும் வேலிகளிலும் இயற்கை உரங்களைப் பயன்படுத்திப் பயிர், செடி கொடிகளை வளர்த்து அதிலிருந்து உணவைப் பெற்று எமது பாரம்பரிய உணவு முறையைப் பேணிப் பாதுகாத்தனர். அவர்களது உணவுகளில் செயற்கைச் சுவையூட்டிகளோ அல்லது இரசாயனக் களைநாசினிகள் பயன்படுத்தப்பட்ட காய்கறிகளோ இல்லாதிருந்ததால் அவர்கள் அனுதினமும் உடலை வருத்தி உழைத்து உண்ணுவதற்கான கலோரிகளையும் விட்டமின்களையும் தங்களது அன்றாட உணவிலிருந்தே பெற்றனர். தமக்கு உண்டான உடல், உள உபாதைகளுக்கான மருந்துகளையும் எவ்வித பக்க விளைவுகளுமற்ற பாட்டி வைத்தியம் எனப்படுகின்ற பாரம்பரிய மருத்துவமுறை மூலமே பெற்றனர். அதனால் அவர்கள் மிகுந்த உடல் பலம் மிக்கவர்களாக விளங்கினர்.

ஆனால் வரையறுக்கப்பட்டிருந்த நிலம் என்ற வளத்தை அவர்களது சந்ததிகளான எமக்காக எப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் துண்டாடத் தொடங்கினார்களோ அன்றிலிருந்து அந்தப் பயிர் நிலங்களும் வேலிகளும் வழக்கொழிந்து அங்கே மாடிமனைகளும், அடுத்த வீடு தெரியாத அளவுக்கு உயரமான மதிற்சுவர்களும் எழுப்பப்பட்டு நமது சமுதாயம் இன்று கொங்கிரீட் குப்பைகளால் சூழப்பட்டுக் கிடக்கின்றது. நாமும் எமது எல்லா நன்மை தீமைகளுக்கும் பொரித்த புரோய்லர் கோழி வைத்த பிரியாணியை உண்டுகொண்டு அந்த புரோய்லர் கோழியைப் போலவே இருந்த இடத்திலிருந்து எழுந்து நடமாட முடியாதளவுக்கு உடல் வலிமை குன்றிப்போய், ஆளாளுக்கு ஆயிரத்தெட்டு நோய்களோடும் அவஸ்தைகளோடும் திண்டாடிக்கொண்டிருக்கின்றோம்.

எனவே இந்நிலையை இயன்றவகையில் கொஞ்சமாவது குறைக்கவும், எமது பாரம்பரியம் மிக்க உணவுகளை மீளவும் எமது சந்ததிக்குக் கொண்டு செல்லவும் எடுத்துக்கொள்ளும் ஒரு முயற்சியாகவே இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்பாடுசெய்து, அதில் ஆர்வத்தோடு கலந்துகொள்பவர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு பரிசுகளையும் வழங்குகின்றோம் எனவும் அங்கு தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 10 போட்டியாளர்கள் பங்குபற்றிய குறித்த போட்டி நிகழ்ச்சிக்கு விசேட விருந்தினராக  உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரனும், கௌரவ விருந்தினர்களாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்களும் வருகை தந்திருந்தனர்.

இதன்போது குறித்த அதிதிகளால் பார்வையிடப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கும், ஆறுதல் பரிசுகளைப் பெற்ற போட்டியாளர்களுக்கும் பரிசில்கள் அங்கு வழங்கிவைக்கப்பட்டன.




















No comments: