Thursday, 14 December 2017

இன்றைய இளைஞர்கள் தமது கடமைகளை செய்யாதிருப்பது எமது நாட்டின் தலைவிதியையே தலைகீழாக்கும் ஒரு செயலுக்கு ஒப்பானதாகும். – ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன்.


உங்கள் ஒவ்வொருவரையும் ஆரோக்கியத்தோடு பெற்று, வளர்த்து, ஆளாக்கியவகையில் உங்களது பெற்றோர் தம் கடமையைச் சரியாகச் செய்துள்ளனர். நீங்கள் பிறந்ததிலிருந்து உங்களுக்குவேண்டிய கல்வி, பராமரிப்பு மற்றும் இன்னோரன்ன வசதிகளையெல்லாம் இலவசமாக வழங்கியும், இன்றுவரை வழங்கிக்கொண்டிருப்பதன் மூலமும் இந்த நாட்டு அரசாங்கம் தனது கடமையைச் சரியாகச் செய்துகொண்டிருக்கின்றது. உங்களைக் கற்பித்த ஆசிரியர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்தனர். உங்களுக்குத் தேவையான வசதிகளை அரசிடமிருந்து முறையாகப் பெற்றுக்கொடுக்கும் முகவர்களான அரச அதிகாரிகள் தங்களது கடமையைச் சரியாகச் செய்கின்றனர். அரசினால் செய்யமுடியாத சில மேலதிக உதவிகளை அவ்வப்போது உங்களுக்கு வழங்கி அரசுசாரா நிறுவனங்களின் பணியாளர்களும் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்துகொண்டிருக்கின்றனர். இவ்வாறு உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்து கொண்டிருக்கின்றபொழுதிலும் இந்த நாட்டின் நாளைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கவிருக்கும் மிகப்பெரும் சக்தியான இளைஞர்களாகிய நீங்கள் உங்களது கடமைகளைச் சரியாகச் செய்யாமலிருப்பது எமது இலங்கைத் திருநாட்டின் தலைவிதியையே தலைகீழாக்கும் ஒரு செயலுக்கு ஒப்பானதாகும் என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தெரிவித்தார்.

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் அனுசரணையோடு அம்பாறை மாவட்ட சேவை பெறுனர் மத்திய நிலையத்தின் (PES) ஊடாகஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (14) காலை இடம்பெற்ற தொழில் நாடுவோருக்கான வழிகாட்டல் மற்றும் தொழில் சேவை மத்திய நிலையத்தில் தொழிலற்றோரைப் பதிவுசெய்யும் நிகழ்வைத் தலைமைதாங்கி உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்,இன்றைய நிலையில் எமது இளைஞர், யுவதிகள்க.பொ.த.(சா.த) அல்லது உயர்தரம் கற்ற பின்னர் மேற்கொண்டு மூன்றாம் நிலைக் கல்வி எதனையும் தொடராமல் வெறுமனே வீட்டிலிருந்து காலத்தை வீணாக்குகின்ற ஒருநிலை தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வருகின்றது. இனித்திருமணம் என்ற போர்வையில் பெண்கள் வீடுகளுக்குள் முடங்கிவிடுவதும், போதைப் பழக்கம் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபாடு கொண்டு இளைஞர்கள் வீதிகளில் உலாவுவதும், அரச பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதுமாகக் கடந்த காலங்களில் இருந்தநிலை இப்போது ஸ்மார்ட் தொலைபேசிகளின் பாவனையால் சைபர் கிரைம்ஸ் எனப்படுகின்ற இணைய வழி மோசடிகள் மற்றும் துஷ்பிரயோக சம்பவங்களாக மாறி வருகின்றமை எமது இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலத்தையே வீணாக்கிவிடும் பயங்கரமான அறிகுறிகளைக் காட்டி நிற்கின்றது. அத்தோடு ஆண்களும் பெண்களும் இன்று ஸ்மார்ட் தொலைபேசிகளின் பாவனைக்கு அடிமையாகி, தமது எதிர்காலம் பற்றிய தூரநோக்கு சிந்தனை எதுவுமில்லாமல் வீட்டுக்குள்ளும், ஆளரவமற்ற இடங்களிலும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வது பல்வேறு உடல் மற்றும் உளவியல் பாதகங்களுக்கு வழிகோலி இப்போது அவர்கள் வெறும் நடைப் பிணங்களாக மாறிக்கொண்டிருக்கும் அபாய நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது. இவற்றிலிருந்து அவர்கள் விடுபடவேண்டும். இந்த விடயத்தில் உங்களது பெற்றோர்களும் இளைஞர்களாகிய நீங்களும் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும்.

ஒருகாலத்தில் உயர்தரத்துக்குப் பிறகு தொழில்நுட்பக் கல்விகளைக் கற்பதாயின் தெற்கே பொத்துவிலிலிருந்து வடக்கே பெரிய நீலாவணை வரையான இளைஞர்கள் ஒன்று சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரிக்கோ அல்லது அம்பாறை ஹாடி உயர்தொழில்நுட்ப நிறுவகத்துக்கோ பயணித்துக் கற்கவேண்டியிருந்தது. இப்போது RVTC எனப்படும் கிராமிய தொழிற்பயிற்சி நிலையங்களும், தொழில்நுட்பக் கல்லூரிகளும் உங்கள் காலடிக்கே வந்துவிட்டாலும், நீங்கள் மட்டும் ஸ்மார்ட் தொலைபேசிகளைக் கட்டிக்கொண்டு காலத்தை வீணாக்குவதை விடுத்து, உங்களது குடும்பம், உங்களது சமுதாயம், உங்களது கிராமம், உங்களது இந்த நாடு என்பவற்றுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு கடமைப்பட்டுள்ளீர்கள் என்பதைச் சிந்தித்துச் செயற்படவேண்டும் எனவும் அங்கு கேட்டுக்கொண்டார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேலையற்ற இளைஞர், யுவதிகள் பங்குபற்றிய குறித்த நிகழ்வின் விருந்தினர்களாகப் பிரதேச செயலாளரருடன் உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் மற்றும் கிராம அலுவலர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ வருகை தந்திருந்தனர்.

இதன்போது வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வை ஆலையடிவேம்பு பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.சந்திரபவன் முன்னெடுத்திருந்ததுடன், தொழில் சேவை மத்திய நிலையத்தில் அவர்களைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை அம்பாறை மாவட்ட செயலகத்தின் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.கங்காதரன் மேற்கொண்டிருந்தார்.









No comments: