Friday, 15 December 2017

ஆலையடிவேம்பில் பாலூட்டும் தாய்மார்களுக்காக நடாத்தப்பட்ட போஷாக்கு மேம்பாட்டு செயலமர்வு


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் செயற்படுத்தப்பட்டுவரும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் இனங்காணப்பட்டுள்ள போஷணை மட்டம் குறைவான குடும்பங்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான பல்துறை சார்ந்த செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ், பாலூட்டும் தாய்மார் மற்றும் தமது குழந்தைகளுக்கு மேலதிக உணவூட்டும் தாய்மாருக்கான போஷாக்கு மேம்பாடு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு அண்மையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வூட்டும் செயலமர்வுக்கு வளவாளர்களாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் எம்.இஸ்மாயில் மற்றும் பொது சுகாதார தாதிய சகோதரி திருமதி. ரவிலதா சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், சிறப்பு விருந்தினராக ஆலையடிவேம்பு பிரதேச திட்டமிடல் பிரதி பணிப்பாளர் கே.பாக்கியராஜா வருகை தந்திருந்தார். இந்நிகழ்வின் பயன்பெறுனர்களாக ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்களும் பாலூட்டும் தாய்மார்களும் பங்குபற்றியிருந்தனர்.

பிரதேச செயலாளரது தலைமையுரையைத் தொடர்ந்து தாய்ப் பாலூட்டல் தொடர்பான செயலமர்வை பொது சுகாதார தாதிய சகோதரி திருமதி. ரவிலதா சந்திரகுமார் முன்னெடுத்திருந்தார். தாய்ப் பாலின் மகத்துவமும் முக்கியத்துவமும் என்ற தொனிப்பொருளில் குழந்தைகளுக்குப் பாலூட்டும் முறை, பாலூட்டவேண்டிய அளவு, கால இடைவெளி மற்றும் தடவைகள், தாய்ப் பாலூட்டவேண்டிய கால அளவு என்பன குறித்துத் தெளிவுபடுத்தியிருந்ததுடன், தாய்ப் பாலூட்டலால் தாய் சேயிடையே உண்டாகும் உளவியல் நெருக்கம், தாய்க்கு ஏற்படும் உடலியல் மாற்றங்கள் மற்றும் அவற்றுகாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மருத்துவ சிகிச்சை முறைகள் என்பன தொடர்பாகவும் விளக்கங்களை வழங்கியிருந்தார்.

அடுத்ததாக குழந்தைகளுக்கு மேலதிக உணவூட்டும் தாய்மாருக்கான ஆலோசனைகள் மற்றும் குழந்தைகளது போஷாக்கு மேம்பாடு தொடர்பான செயலமர்வை ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் எம்.இஸ்மாயில் முன்னெடுத்திருந்தார். ஆறு மாதங்கள் தொடர்ச்சியான தாய்ப்பாலூட்டலுக்குப் பின்னர் மேலதிக உணவுகளை எவ்வாறு குழந்தைகளுக்குப் பழக்கலாம் என்பது தொடர்பாகவும், எவ்வாறான தானிய உணவுகளை குழந்தைகளுக்கு வழங்கலாம், அவற்றின் அளவு மற்றும் தயாரிக்கும் முறைகள் என்பன தொடர்பாகவும் அவரது விளக்கங்கள் அமைந்திருந்தன.

குறித்த விழிப்புணர்வுச் செயலமர்வினை ஆலையடிவேம்பு பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சுகந்தினி தனராஜன் ஒழுங்குபடுத்தியிருந்ததோடு, நிகழ்வில் பயன்பெறுனர்களாகப் பங்குபற்றியிருந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப் பாலூட்டல் மற்றும் மேலதிக உணவூட்டல் தொடர்பாக அறிவூட்டும் பிரசுரங்களும், காலை உணவாகப் போஷணை நிறைந்த குரக்கன் கூழ் மற்றும் அவித்த கடலை என்பன பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.













No comments: