Tuesday, 19 December 2017

ஆலையடிவேம்பில் கிராமமட்ட தொண்டர் அமைப்புக்களுக்காக நடாத்தப்பட்ட போஷாக்கு மேம்பாட்டு செயலமர்வு


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் செயற்படுத்தப்பட்டுவரும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் இனங்காணப்பட்டுள்ள போஷணைமட்டம் குறைவான குடும்பங்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான பல்துறை சார்ந்த செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிராமமட்டங்களில் சேவையாற்றும் தொண்டர் அமைப்புக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான ஒருநாள் போஷாக்கு மேம்பாடு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (19) ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வூட்டும் செயலமர்வுக்கு வளவாளர்களாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் உட்பட அம்பாறை மாவட்ட செயலகத்தின் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.பதுர்தீன் மற்றும் சர்வதேச அரசுசாரா தொண்டர் அமைப்பான வேர்ள்ட் விஷன் நிறுவனத்தின் போஷாக்கு ஒருங்கிணைப்பாளர் பி.லோகிதராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், சிறப்பு விருந்தினர்களாக உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச திட்டமிடல் பிரதி பணிப்பாளர் கே.பாக்கியராஜா ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

முதலில் குறை போஷாக்கு நிலைக்கான காரணங்களையும் அவற்றின் விளைவுகளையும் கண்டறிதல் தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் தனது அமர்வை முன்னெடுத்திருந்தார். அடுத்ததாக இலங்கை அரசாங்கத்தின் பல்துறைசார் போஷாக்கு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான அமர்வை அம்பாறை மாவட்ட செயலகத்தின் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.பதுர்தீன் முன்னெடுத்திருந்தார். இறுதியாகக் கிராமமட்டத்தில் தொழிலாற்றும் அரச உத்தியோகத்தர்களோடிணைந்து எவ்வாறான விதங்களில் தொண்டர்களும் இதர தொண்டுப் பணியாளர்களும் தமது கடமைகளை முன்னெடுக்கவேண்டும் என்பது தொடர்பாக வேர்ள்ட் விஷன் நிறுவனத்தின் போஷாக்கு ஒருங்கிணைப்பாளர் பி.லோகிதராஜா அங்கு தெளிவுபடுத்தியிருந்தார்.

குறித்த விழிப்புணர்வுச் செயலமர்வினை ஆலையடிவேம்பு பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சுகந்தினி தனராஜன் ஒழுங்குசெய்திருந்தார்.












No comments: