விஸ்வநாதனே, மெல்லிசையின் விஸ்வரூபமே, நீ கண்ணைவிட்டுப் போனாலும் எங்கள் கருத்தைவிட்டுப் போவதில்லை; நீ மண்ணைவிட்டுப் போனாலும் எங்கள் நினைவைவிட்டுப் போவதில்லை!
"மெல்லிசை மன்னர்' எம்.எஸ். விஸ்வநாதன் மறைந்துவிட்டார் என்கிற செய்தி கேட்டு மகுடிக்கு மயங்கிய பாம்பாகக் கிடக்கும் அவரது ரசிகர் கூட்டம் மட்டுமல்ல, ஹார்மோனியப் பெட்டிகளும், வயலின்களும், தபேலாக்களும் கூடக் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கக் கூடும்.
இனிமேல் அந்த இசைக் கருவிகளில் வேறு யாருக்குமே புலப்படாது மறைந்திருக்கும் இனிமைகளை எல்லாம் வெளிக்கொணரும் தேர்ச்சி பெற்ற இசை மேதை பிறந்துதான் வர வேண்டும் என்பது அவற்றுக்குத் தெரியாதா என்ன?
பிரபல இசையமைப்பாளராக இருந்த எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் ஹார்மோனியப் பெட்டியைத் துடைத்து சுத்தம் செய்து வைக்கும் பணியைச் செய்து கொண்டிருந்த விஸ்வநாதன் என்கிற சிறுவன், வருங்காலத்தில் ஹார்மோனியத்திலிருந்து ஆயிரக்கணக்கான மெட்டுகளை வெளிக்கொணர்ந்து இசை சாகசம் நடத்தப் போகிறான் என்பது இசைத் தெய்வம் அவருக்கு அளித்திருந்த வரம்.
பிரபல இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பராமனின் குழுவில் இருந்த விஸ்வநாதனையும், இராமமூர்த்தியையும் இணைத்து வைத்த பெருமை "கலைவாணர்' என்.எஸ். கிருஷ்ணனைச் சேரும்.
சி.ஆர். சுப்பராமனின் மரணத்தைத் தொடர்ந்து, பாதியில் நின்றிருந்த "தேவதாஸ்' படத்தின் பின்னணி இசையை முடித்துக் கொடுக்க இணைந்தனர் என்றாலும், என்.எஸ். கிருஷ்ணனின் இயக்கத்தில் உருவான "பணம்' திரைப்படம் தான் மெல்லிசை இரட்டையர்களை முறையாகத் தொழில்ரீதியாக இணைத்த திரைப்படம்.
அடுத்த 13 ஆண்டுகள் மெல்லிசை இரட்டையர்கள் உருவாக்கி அளித்த இசைக் காவியங்கள், தமிழ்த் திரையுலக வரலாற்றில் அழிக்க முடியாத பதிவுகள்.
மும்மூர்த்திகளும், ஏனைய சாகித்ய கர்த்தாக்களும் மெட்டமைத்துப் பல்வேறு ராகங்களில் உருவாக்கிய பாடல்களை மேடையில் இசைக்கும் பாடகர்களை நாம் மேதைகள் என்கிறோம். ஆனால், "மெல்லிசை மன்னர்' எம்.எஸ். விஸ்வநாதனால், ஒரு கல்யாணியையோ, காம்போதியையோ, ஆரபியையோ, ஆபோகியையோ அதன் அடிப்படை ஸ்வரங்களைப் பயன்படுத்தி, மெட்டமைத்து மூன்று நிமிடங்கள் இசைக்கின்ற பாடலாக்கிவிட முடியும்.
இது மாபெரும் இசை மேதைகள் என்று போற்றப்படும் கர்நாடக இசையுலக ஜாம்பவான்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வித்வத்தின் உச்சகட்டம் அல்லவா!
"பிருந்தாவன சாரங்கா' ராகத்தைப் பயன்படுத்தி, "பொன்னொன்று கண்டேன், பெண்ணங்கு இல்லை' என்றும், "கீரவாணி'யைக் கையாண்டு "நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை இழப்பதில்லை' என்றும், "நடபைரவி'யை அடிப்படையாகக் கொண்டு, "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா' என்றும், "பெஹாக்' ராகத்தில் "ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்' என்றும், "ஆபேரி'யில் "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல', "ஆபோகி'யில் "தங்கரதம் வந்தது வீதியிலே', "மத்யமாவதி'யில் "முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம்' என்று எண்ணிலடங்காத தனித்துவமான கற்பனைகளை அள்ளி வழங்கி இருக்கிறார் எம்.எஸ்.வி.
இந்த மாமேதைக்கு அல்லவா சென்னை சங்கீத வித்வத் சபை நியாயமாகப் பார்த்தால் "சங்கீத கலாநிதி' விருது வழங்கி கௌரவித்திருக்க வேண்டும்?
ராகங்களின் நாடியைப் பிடித்து, அடிப்படை ஸ்வரங்களின் உதவியுடன் ஒன்றரை நிமிடத்தில் சாகித்யமாக்கி, அதை ஜனரஞ்சகப்படுத்தவும் தெரிந்த இசை வித்தகனை அடையாளம் காணக்கூடத் தெரியாதவர்கள், கர்நாடக சங்கீதத்தை "சம் ரக்ஷிப்பதாக' சொல்லிக் கொள்வது எத்துணை போலித்தனம்?
அது போகட்டும். முதல்வர்களாக இருந்த கருணாநிதி, எம்.ஜி.ஆர். இருவருமே எம்.எஸ். விஸ்வநாதனின் திறமையை அறிந்தவர்கள் மட்டுமல்ல, பயன்படுத்திக் கொண்டவர்களும்கூட. பல காலகட்டங்களில் மத்திய அரசில் இருந்தவர்களுக்கு நெருக்கமாகவும், மத்திய அரசை வழிநடத்துபவர்களாகவும் இருந்தவர்கள். அப்படி இருந்தும், இவ்வளவு திறமைசாலியான ஒரு மேதைக்கு "பத்ம விபூஷண்' விருது பெற்றுத் தந்தார்களா? அந்த விருதுக்குப் பரிந்துரைத்தார்களா என்றால் இல்லை.
அவர்களது செய்கை வியப்பைத் தரவில்லை. எம்.எஸ். விஸ்வநாதன் அதை ஒரு பொருட்டாக நினைத்திருந்தால், அவர்களைச் சந்தித்துத் தனக்கு "பத்ம' விருது பெற்றுத்தரப் பரிந்துரைக்கச் சொல்லியிருப்பார். சொல்லவில்லை. அதுதான் மெல்லிசை மன்னரை மாமேருபோல உயரச் செய்து நம்மை மரியாதையுடன் நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. அவருக்கு தரப்படாததால் "பத்ம' விருதுகள் மரியாதை இழக்கின்றன என்பதுதான் உண்மை.
எம்.எஸ். விஸ்வநாதன் என்கிற இசைக் கலைஞனின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று ஏறத்தாழ 1,200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும், மூன்று தலைமுறைகளைக் கடந்து தொடர்ந்து இசையமைப்பாளராக கோலோச்சியிருக்கும் எம்.எஸ். விஸ்வநாதன் என்கிற இறவாப் புகழ்பெற்ற இசைக் கலைஞன் தனது 88வது வயதில் நேற்று நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார் என்பதைவிட இசையாய் காற்றில் கலந்திருக்கிறார் என்பதுதான் நிஜம்.
‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்' என்கிற அவர் இசையமைத்த தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்படும் காலம் வரை, எம்.எஸ். விஸ்வநாதன் என்கிற இசை மேதையின் நினைவும், புகழும் நிலைபெற்றிருக்கும்.
விஸ்வநாதனே, மெல்லிசையின் விஸ்வரூபமே, நீ கண்ணைவிட்டுப் போனாலும் எங்கள் கருத்தைவிட்டுப் போவதில்லை; நீ மண்ணைவிட்டுப் போனாலும் எங்கள் நினைவைவிட்டுப் போவதில்லை