அரசசார்பற்ற சர்வதேச தொண்டு நிறுவனமான ஹன்டிகப் இன்டர்நேஷனல் நிறுவனத்தினால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாத பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மிகவும் பாதிக்கப்பட்ட சுமார் 800 குடும்பங்களை குறித்த வெள்ள அனர்த்தத்துக்கு முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவரும் உடனடி செயற்திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஆணைக்குழுவின் மனிதாபிமான செயலகத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 21 குடும்பங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாங்கட்டப் பணக்கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு (08) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஹண்டிகப் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உதவிப் பணிகளுக்கான முகாமையாளர் ஏ.ஜி.கலீலுர் ரஹ்மான் மற்றும் திட்ட உத்தியோகத்தர் எஸ்.நவராஜ் ஆகியோரின் பிரசன்னத்துடன் இடம்பெற்ற இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.தனராஜன், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினரால் தெரிவுசெய்யப்பட்ட மேற்படி குடும்பங்களுக்கு உணவுக் கொள்வனவுக்கான முதலாம் மற்றும் இரண்டாங்கட்ட நிதியுதவிகள் பிரதேச செயலாளராலும் ஏனைய உத்தியோகத்தர்களாலும் வழங்கிவைக்கப்பட்டன. தொடர்ந்து அடுத்த மாதம் இதன் இறுதிக்கட்டக் கொடுப்பனவு குறித்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், இச்செயற்திட்டத்திற்கான பின்தொடர் நடவடிக்கைகளில் ஹண்டிகப் நிறுவனத்துடன் இணைந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Regards,
No comments:
Post a Comment