பிரேம்...
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் கீழியங்கும் சிறுவர் செயலகத்தின் அனுசரணையோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட “செனஹே தடாக” எனும் கருப்பொருளிலமைந்த, வீட்டை அடிப்படையாகக் கொண்ட முன்பிள்ளைப் பருவம் தொடர்பில் அரச அலுவலர்கள், இளைஞர் குழுக்களைத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (03) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச முன்பிள்ளைப்பராய அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தனால் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த நிகழ்வினை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமைதாங்கி நடாத்தியதுடன், திருக்கோவில் வலயக்கல்விப் பணிமனையின் அழகியற்கலைப் பிரிவிற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் வளவாளராகவும், பிரதேச செயலகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராசா விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
ஆலையடிவேம்பு பிரதேச மற்றும் பிரதேச செயலக அரச உத்தியோகத்தர்களும், பிரதேச இளைஞர் குழுக்களின் உறுப்பினர்களும், பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்ட குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் முன்பிள்ளைப்பராய அபிவிருத்தி உத்தியோகத்தரது வரவேற்புரையைத் தொடர்ந்து பிரதேச செயலாளரது தலைமையுரை இடம்பெற்றது.
அடுத்து வளவாளர் ஸ்ரீதரனால் கலை, நடனம், பாடல்கள் போன்ற தனிப்பட்ட ஆற்றல்களை அடிப்படையாகக்கொண்டு தற்போது முன்பள்ளி செல்கின்ற மற்றும் எதிர்காலத்தில் செல்லத் தயாராகவுள்ள சிறார்களின் செயற்திறன்களை அபிவிருத்தி செய்தல் தொடர்பாகவும், அவ்வாறான செயற்பாடுகளில் பெற்றோர்கள் மற்றும் குறித்த சிறுவர்கள் வாழ்கின்ற சக சமுகத்தவர்கள் என்றவகையில் எவ்வாறு அவர்களை ஊக்குவிக்கலாம் போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன், சிறார்களின் உளவிருத்தியைச் சமநிலைப்படுத்தும்வகையில் அவர்களை அழகியற்கலைச் செயற்பாடுகளில் ஈடுபடுத்திக்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பில் பங்குபற்றுனர்களிடையேயிருந்து ஆக்கங்கள் பெறப்பட்டு அவை மூலமான தெளிவுபடுத்தல்களும் இடம்பெற்றிருந்தன.
No comments:
Post a Comment