Wednesday, 1 July 2015

சேவையாற்றும் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்த வேண்டும்

அம்பாறை மாவட்ட மீனவர் பேரவையானது நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை மையப்படுத்தி அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டடத்தில் ஊடகவியலாளர் மாநாட்டை செவ்வாய்க்கிழமை (30) நடத்தியது.
 
மாவட்ட மீனவர் பேரவையின் இணைப்பாளர் இஸத்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
 
இணைப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில், இந்த நல்லாட்சி அரசாங்கம் உதயமானதைத் தொடர்ந்து நாட்டு மக்களிடையே இலஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட்டதுடன் பக்கசார்பற்ற முறையில் நீதி நியாயம் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டு வருவது நிரூபிக்கப்பட்டு வருக்கின்றது.
 
எதிர்வரும் பொதுத்தேர்தலில் மீனவ சமூகம் உட்பட நாளாந்த உழைப்பாளிகளின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணக்கூடிய தலைவர்களே வேட்பாளராக கட்சி தலைமைப்பீடம் தெரிவு செய்து மக்கள் முன் நிறுத்த வேண்டுமென மாவட்ட மீனவர் சார்பாக பேரவை எதிர்பார்க்கின்றது.
 
எமது அமைப்பின் கீழ் அஷ்ரப் நகர், ஒலுவில் - 6, அட்டாளைச்சேனை, திராய்க்கேணி, விநாயகபுரம் மற்றும் கண்ணகிபுரம் ஆகிய ஆறு கிராம கிளைச் சங்கங்கள் உள்ளன.
 
இக்கிராமங்களின் பிரச்சினைகள் வெவ்வேறாக இருப்பினும் ஒட்டு மொத்தமாக மக்களது வாழ்வாதார பிரச்சினைக்கு உரிய தீர்வுக்கான உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர்கள், அது எந்தக் கட்சியாக இருந்தாலும் களம் இறங்குதல் கண்டிப்பாக இருக்கும் போது எமது அமைப்பு, அவர்களை ஆதரவளிக்கும் என உறுதிபடத் தெரிவித்தார். 

No comments: