பிரேம்..
இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகளுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று (10) காலை அக்கரைப்பற்று தருமசங்கரி மைதானத்தில் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்துசிறப்பித்ததுடன், விசேட அதிதிகளாக மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்களான யூ.எல்.உமர் லெவ்வை மற்றும் யூ.எல்.எம்.மஜீத் ஆகியோருடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராமசேவை நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ மற்றும் அளிக்கம்பைக் கிராமப் பங்குத்தந்தையர்களான றொஹான் மற்றும் தேவராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது இன்று காலை குறித்த மைதானத்தில் இடம்பெற்ற சுவட்டு நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற வீரர்கள் அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். இவ்விளையாட்டு விழாவில் குறிப்பிடத்தக்கவகையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமான அளிக்கம்பை கிராமத்திலிருந்து இம்முறை கலந்துகொண்ட இளைஞர் கழக வீர, வீராங்கனைகள் அதிகமான வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்திருந்தனர். அத்துடன் இளைஞர் விவகார அமைச்சினால் விரைவில் நடாத்தப்படவுள்ள மாவட்டமட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான தகுதிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இச்சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் உரையாற்றிய பிரதேச செயலாளர், அளிக்கம்பை கிராமத்திலிருந்து இம்முறை போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியீட்டிய இளைஞர், யுவதிகளையும் அவர்களை ஊக்குவித்த அருட்தந்தையர்கள் இருவரையும், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரையும் பாராட்டிப் பேசியதுடன், அவர்கள் இடம்பெறவுள்ள மாவட்டமட்ட விளையாட்டுப் போட்டிகளிலும் இதேபோன்று வெற்றிபெற்று சாதனைகள் பல படைக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment