Thursday, 16 July 2015

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம்

இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கல்வி அமைச்சுடன் இணைந்து ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் பாடசாலை மட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான பாதுகாப்புக் குழுக்களை அமைப்பதனூடாக அவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வொன்று இன்று (16) காலை கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.






குறித்த பாடசாலையின் அதிபர் கே.தட்சணாமூர்த்தியினால் ஒழுங்குசெய்யப்பட்டு, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி. நிசாந்தினி வசந்தரூபன், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி. யசோதா கபிலன் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சிபாயா றமீஸ் ஆகியோரும் மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பாடசாலை மட்டத்திலும், மாணவர்கள் தாம் வாழும் சமூகத்திலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்களைத் தமது உரிமைகள் தொடர்பில் அறிவூட்டல், துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் வழிமுறைகள் தொடர்பில் தெளிவூட்டல், அவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பில் நெறிப்படுத்தல் போன்ற விடயங்களில் பிரதேச செயலாளரும் ஏனைய அதிகாரிகளும் மாணவர்களிடையே தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

மேலும் பாடசாலை மட்டத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான பாதுகாப்புக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலும் அதிபர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்று, அவை தொடர்பான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

No comments: