Thursday, 27 February 2014

"2014 ஆம் ஆண்டுக்கான நிருவாகக்குழுத் தெரிவுகள்"

ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளன மற்றும் சமுர்த்தி மகா சங்கப் பயனாளிக் குழுக்களுக்கான 2014 ஆம் ஆண்டுக்குரிய நிருவாகக்குழுவினைத் தெரிவு செய்யும் கூட்டங்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் கடந்த 24-02-2014, திங்கட்கிழமை நடைபெற்றன.

முதலாவதாக இடம்பெற்ற ஆலையடிவேம்பு இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின் இவ்வாண்டுக்கான நிருவாகக்குழுத் தெரிவுக்கூட்டத்திற்கு அம்பாறை மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி யூ.எல்.எம்.மஜீத், ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ரி.ஜெயந்தன் ஆகியோருடன் சுமார் 130 க்கும் மேற்பட்ட பிரதேச இளைஞர் கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் 21 உறுப்பினர்களை உள்ளடக்கிய இவ்வருடத்திற்கான நிருவாகக்குழு தெரிவுசெய்யப்பட்டதுடன் பிரதேச விளையாட்டுப்போட்டிகளை நடாத்துவதற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் கடந்த வருடத்தில் பதிவுக்காக விண்ணப்பித்திருந்த இளைஞர் கழகங்களுக்கான பதிவுச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அடுத்து இடம்பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச சமுர்த்தி மகா சங்கத்தின் பயனாளிக் குழுக்களுக்கான நிருவாகக்குழுவினைத் தெரிவு செய்யும் கூட்டத்திற்கு சமுர்த்தி மகா சங்கப் பணிப்பாளர் ரி.பரமானந்தம், தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா, சமுர்த்தி வங்கிச்சங்க முகாமையாளர்களான கே.அசோக்குமார், ரி.கமலப்பிரபா ஆகியோருடன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் 22 கிராமசேவகர் பிரிவுகளையும் சேர்ந்த பயனாளிக் குழுக்களின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்விலும் 21 உறுப்பினர்களை உள்ளடக்கிய இவ்வருடத்திற்கான நிருவாகக்குழு தெரிவுசெய்யப்பட்டதுடன் ஒருவருட பதவிக்காலத்தைக்கொண்ட இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் சமுர்த்தி வங்கிச்சங்கத்தினால் வழங்கப்படவுள்ள குறுநிதிக்கடன் திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 

No comments: