Thursday, 12 March 2020

20ஆம் திகதி முதல் விதைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படலாம்

haran
(வி.சுகிர்தகுமார்) 
அம்பாரை மாவட்டம் சாகாமம் மற்றும் வம்மியடி நீர்ப்பாசன குளத்தின் மூலம் சிறுபோக செய்கை மேற்கொள்ளக்கூடிய 2955 ஏக்கர்களில்  2930 ஏக்கர் வயல் நிலங்களுக்கும் இம்முறை விவசாய செய்கைக்காக அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன் இம்மாதம் 20ஆம் திகதி முதல் விதைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படலாம் எனவும் ஏப்ரல் 10ஆம் திகதியுடன் விதைப்பு நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும் எனவும் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.




ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்  (11) நடைபெற்ற சிறுபோகச் செய்கைக்கான ஆரம்ப கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர் கே;.லவநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் உதுமாலெவ்வை நசார் ஆலைடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர் நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்கள் விவசாய பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
சிறுபோகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் இறுதி நீர் விநியோகம் ஜீன் மாதம் 20ஆம் திகதி வழங்கப்படும் எனவும் மூன்று தொடக்கம் மூன்றரை மாத நெல்லினங்களை விதைக்குமாறும் விவசாயத்தினை மேற்கொள்ளும் அனைவருக்கும் மானிய உரவிநியோகம் வழங்கப்படும் எனவும் கூறினார்.

இதன் பிரகாரம் குளம் மற்றும் வடிச்சல் நீரைப்பயன்படுத்தி பட்டிமேடு வடக்கு, பட்டிமேடு தெற்கு, பட்டிமேடு மத்தி,  மொட்டையாகல், சேனைக்கண்டம், ஊரக்கை கண்டம் ஆகிய விவசாய செய்கை பிரதேசங்களில் முறையே 560, 265, 225,  653, 572, 655,  ஏக்கர் அடங்கலாக 2930 ஏக்கர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

தற்போது சாகாமக் குளத்தில் உள்ள நீரின் அளவு மற்றும் வம்மியடி நீர்ப்பாசன குளத்தின் அளவை வைத்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தின் போது நெற்செய்கை தொடர்பிலான பல்வேறு குறைபாடுகள் தொடர்பிலும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் விவசாயிகள்  கோரிக்கைகளாக கருத்தை முன்வைத்தனர்.

இதேநேரம் விவசாய செய்கை தொடர்பிலும் முறையற்ற விவசாய செய்கையினால் ஏற்படும் விளைவுகள் தொடர்பிலும் அதிகாரிகளானல் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. எவ்வாறாயினும் கடந்த சிறுபோகத்தில் 1030 ஏக்கருக்கு மாத்திரம் நீர் வழங்க அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சாகாமம் மற்றும் வம்மியடி நீர்ப்பாசன குளத்தின் மூலம் 2930 ஏக்கர் வயல் நிலங்களுக்கும் விவசாய செய்கைக்காக அனுமதி Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

No comments: