Wednesday, 22 November 2017

தேசிய மட்ட விசேட தேவையுடையோருக்கான மெய்வல்லுனர் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவிக்கு கௌரவம்




அண்மையில் கொழும்பில் நடைபெற்றுமுடிந்த இவ்வருடத்தின் விசேட தேவையுடையோருக்கான தேசிய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலய மாணவி மகேந்திரன் செரின் வெண்கலப் பதக்கம் ஒன்றை வெற்றிகொண்டு சாதனை படைத்துள்ளார்.

குறித்த போட்டித் தொடரில் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கான 100 மீற்றர் குறுந்தூர இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்திருந்த அவருக்குப் பதக்கம் அணிவித்து சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (22) மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸனின் பிரசன்னத்துடன் இடம்பெற்ற நிகழ்வில் குறித்த அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலயத்தின் விசேட தேவையுடையோர் பிரிவு மாணவி இவ்வாறு கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருடன் இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலயத்தின் விசேட தேவையுடையோருக்கான கல்விப் பிரிவுப் பொறுப்பாசிரியர் வி.தயாநிதியும், சமுக சேவைகள் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தரான ஆர்.சிவானந்தமும் கலந்துகொண்டிருந்தனர்.

மெய்வல்லுனர் போட்டிகளில் தொடர்ச்சியாகத் தனது திறமைகளை வெளிப்படுத்திவரும் குறித்த மாணவி, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையோடு கடந்த ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆந் திகதிகளில் நடாத்தப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்தில் வதியும் விசேட தேவையுடையோருக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளின்போது 14 – 18 வயதுக்குட்பட்டோர் பிரிவுக்காக இடம்பெற்ற 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் முறையே 3 ஆம் இடங்களைப் பெற்று வெண்கலப் பதக்கங்களைச் சுவீகரித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சமுக சேவைகள் மற்றும் நலனோம்புகை அமைச்சின் அனுசரணையோடு கடந்த செப்டெம்பர் 9 ஆந் திகதி அம்பாறை, எச்.எம்.வீரசிங்ஹ மைதானத்தில் இடம்பெற்று முடிந்த அம்பாறை மாவட்ட மட்ட விசேட தேவையுடையோருக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளின்போது 14 – 18 வயதுக்குட்பட்டோர் பிரிவுக்காக இடம்பெற்ற 100 மீற்றர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் முதலிடத்தைக் கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.









No comments: