Thursday, 30 November 2017

ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டனப் பணிப் பகிஷ்கரிப்பு




ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸனை அவமதிக்கும் வகையில் பிராந்திய இணையத்தளமொன்றினூடாகக் கடந்த செவ்வாயன்று (28) வெளியிடப்பட்ட செய்தி மற்றும் அதனைத் தொடர்ந்து முகநூலில் இடம்பெற்றுவரும் முறையற்ற விமர்சனங்கள் தொடர்பில் கண்டனத்தைத் தெரிவிக்கும்முகமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நேற்று (29) பிற்பகல் அடையாள பணிப் பகிஷ்கரிப்பொன்றில் ஈடுபட்டனர். இப்பணிப் பகிஷ்கரிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பிரதேச சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அவர்களோடு இணைந்திருந்தனர்.

அக்கரைப்பற்றில் சடுதியாக ஏற்பட்ட மழை வீழ்ச்சியினால் வெள்ள அனர்த்தம் உண்டானதைத் தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலக ஆளுகைக்குட்பட்ட சின்னமுகத்துவாரம் கழிமுகத்தைத் திறந்துவிடும் சம்பவம் தொடர்பில் தவறான செய்தியை வெளியிட்ட குறித்த இணையத்தளத்திற்கு எதிராகவும், அச்செய்தியை வெளியிட்ட சம்மந்தப்பட்ட நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுத்தியும், பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், பிரதேச கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘அரசே! அவதூறு செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடு’, பொறுப்பற்ற முறையில் ஊடகங்கள் செயற்படுவதா?’, அரசியலுக்காக அரச அதிகாரிகளை அவமானப்படுத்தாதே!’, இனவாதத்தை விதைத்து அரசியல் செய்யாதே!’, அரசியல் இலாபத்திற்காக இனமுறுகலை ஏற்படுத்தாதே!’  உள்ளிட்ட பல பதாதைகளை அவர்கள் ஏந்தியவண்ணம் அங்கு கோஷமிட்டனர்.

நேற்று (29) மாலை 3.00 மணியளவில் ஆரம்பமான இப்பணிப் பகிஷ்கரிப்பினால் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பொதுமக்களுக்கான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.

கடந்த 27 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அபாயநிலையை கட்டுப்படுத்துவதற்காக பனங்காடு, தில்லையாற்றின் மூலம் வெள்ள நீர் வடிந்தோடும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் கடற்கரை பிரதேசத்தை அகழ வேண்டும் என அண்மையில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் ஆகியோர் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் உரிய அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடியதற்கிணங்க தேவை ஏற்படும் பட்சத்தில் உரிய பகுதி உடனடியாக அகழ்ந்து விடப்படும் எனப் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேண்டுமென்றே இவ்வாறு தெரிவித்து முஸ்லிம் மக்களைப் பாதிப்படையச் செய்வதாகக் குறிப்பிட்டு குறித்த இணையத்தளத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரால் அவதூறான வார்த்தைகளால் இன முரண்பாடு ஏற்படும்வகையில் செய்தி வெளியிடப்பட்டதுடன், அது தொடர்பான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இதனை முற்றாக எதிர்க்கும் வகையிலும், குறித்த நபர்களுக்கெதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்த அதேவேளை, சம்பவ இடத்திற்கு வருகை தந்த அக்கரைப்பற்று பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் உதவி பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் அது தொடர்பான மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தார்.

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் வாழும் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே இன ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கோடு சேவையாற்றிவரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரை ஒரு சிலர் தங்களது வங்குரோத்து அரசியல் நிலையைச் சரி செய்யவும், இனங்களுக்கிடையே முரண்பாட்டை உண்டுபண்ணுவதன் மூலம் தாம் அடைந்துகொள்ள எத்தனிக்கும் சுய இலாபங்களுக்காகவும் இவ்வாறு செயற்படுவதாகவும், இதன் மூலம் இனங்களுக்கிடையே கசப்புணர்வை ஏற்படுத்தி அரசியல் நடத்த முயற்சிப்பதாகவும் பணிப் பகிஷ்கரிப்பில் கலந்து கொண்டவர்கள் கருத்துத் தெரிவித்தனர். எவ்வித பாரபட்சமுமின்றிக் குறித்த சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் அவர்கள் அங்கு வலியுறுத்தினர்.

இதேவேளை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன மத வேறுபாடின்றி ஒற்றுமையுடன் தாங்கள் கடமையாற்றுவதாகவும், பிரதேச செயலாளர் பாகுபாடின்றி அனைவரையும் அரவணைத்துச் செயற்பட்டுவரும் இந்தச் சந்தர்ப்பத்தில் வேண்டுமென்றே அரசியல் இலாபத்திற்காக மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையைத் தாங்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு முஸ்லிம் மக்கள் சார்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரிடம் மன்னிப்பு கோருவதாகவும் அங்கு கடமையாற்றும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தெரிவித்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன், அரச அதிகாரிகளை வீணாக விமர்சித்து கடுமையான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டுள்ள விடயம் தொடர்பில் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த விடயத்தில் எந்தவொரு இனப் பாகுபாட்டுடன் கூடிய முடிவுகளும் என்னால் எடுக்கப்படவில்லை என்பதை ஆணித்தரமாக கூறிவைக்க விரும்புகின்றேன். ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள 60% வயல் நிலங்கள் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமானவை. அதேபோன்று மீன்பிடித் தொழிலும் முஸ்லிம் மக்களே அதிகமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படாத வகையிலேயே நான் முடிவுகளை மேற்கொண்டேன். சடுதியாக முகத்துவாரம் வெட்டப்படுவதனால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை கடந்த காலத்தில் நாம் அனைவரும் அறிந்துவைத்துள்ளோம். அதன் பிரகாரமே நான் பல அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்துத் தீர்மானங்களை மேற்கொண்டதோடு, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் கோரிக்கை விடுத்த மறுதினமே அகழ்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டேன்.

இந்நிலையில் குறித்த சில நபர்கள் இதைவைத்து இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும்வகையில் மேற்கொண்ட இச்செயற்பாட்டை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன் என்றார்.






No comments: