தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள்
அமைச்சின் அனுசரணையோடு ஆலையடிவேம்பு கோட்டக் கல்வி அலுவலகம் நடாத்திய பல்லின
மாணவர்களின் சகோதர சங்கமம் நிகழ்வு இன்று (20) காலை இடம்பெற்றது.
ஒற்றுமையுடன் ஒன்றுபடுவோம் என்ற கருப் பொருளோடு ஆலையடிவேம்பு
கோட்டக் கல்விப் பணிப்பாளரும், திருக்கோவில் சமாதானக் கல்வி இணைப்பாளருமான எஸ்.இராசமாணிக்கத்தின்
தலைமையில் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அம்பாறை,
அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் கல்வி வலயங்களுக்குட்பட்ட மூவினங்களையும்
சேர்ந்த பாடசாலை மாணவர்களும், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்ட
குறித்த நிகழ்விற்கு அதிதிகளாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.
என்.புள்ளநாயகம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன், உதவி பிரதேச செயலாளர்
ரி.கஜேந்திரன் மற்றும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள்
அமைச்சர் மனோ கணேசனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.பிரகதீஸ்வரன் ஆகியோர் கலந்து
சிறப்பித்திருந்தனர்.
மும்மதங்களையும் சேர்ந்த சமய குருமாரின் சமய அனுஸ்டானங்களுடன்
ஆரம்பமான நிகழ்வுகளில் இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய
வகையில் ஆங்காங்கே இடம்பெற்றுவருகின்ற இன முரண்பாடுகள், அவற்றைத் தொடர்ந்து இடம்பெற்றுவரும்
வன்முறைச் சம்பவங்கள் என்பவற்றினால் கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவியதைப்போல மீண்டுமொரு
அசாதாரண சூழ்நிலை இந்த நாட்டில் உண்டாகாதவண்ணம் ஏற்படுத்தப்படவேண்டிய சாதக
நடவடிக்கைகளை மாணவப் பருவத்திலிருந்து ஊட்டி வளர்க்கவேண்டியதன் தேவைப்பாடுகள்
குறித்து அதிதிகள் தங்களது உரைகளில் குறிப்பிட்டிருந்தனர்.
அத்துடன் ஒற்றுமையுடன் ஒன்றுபடுவோம் என்ற கருப் பொருளோடு சிங்கள,
தமிழ், முஸ்லிம் மாணவர்களின் சமய மற்றும் பாரம்பரியக் கலை நிகழ்வுகள் அங்கு மேடையேற்றப்பட்டதுடன்,
மாணவர்களுக்கான பரிசளிப்புக்களும், அதிதிகளுக்கான நினைவுச் சின்னம் வழங்கும்
நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
No comments:
Post a Comment