Sunday, 26 April 2015

திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிபெறும் வறிய மக்களுக்கு வாழ்வாதார உதவிப்பொருட்களை வழங்கிவைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நேற்று, 22-04-2015 புதன்கிழமை பி.ப. 3.00 மணிக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதேச செயலாளரது அழைப்பினை ஏற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன், நீர்ப்பாசனப் பிரதியமைச்சர் திருமதி.அனோமா கமகேயின் இணைப்பாளர் எம்.எம்.நிசாம், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச இணைப்பாளர் எஸ்.மோகன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.





ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நூறுநாள் துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் திவிநெகும பயனாளிகளின் வாழ்வாதாரச் சிறுதொழில் முயற்சிகளை ஊக்குவித்து, அவர்களது வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றும்பொருட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்களால் தெரிவுசெய்யப்பட்ட 189 குடும்பங்களுக்கு குறித்த உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர், இவ் உதவிப் பொருட்களை உரிய மக்களுக்கு வழங்குவதில் கடந்தகாலங்களில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நிலவிய அரசியல் பாகுபாடுகள், முறையற்ற வீண் விரயங்களைத் தவிர்த்து தற்போது முற்றுமுழுதாக வாழ்வின் எழுச்சி அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்களின் சரியான தெரிவுகளின் அடிப்படையிலேயே குறித்த பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர் திருமதி.அனோமா கமகேயின் இணைப்பாளர், பிரதி அமைச்சரின் சிபாரிசுகளின்பேரில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்தார்

No comments: