ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சினால் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷணைப் பொருட்களை வழங்கிவைக்கும் நிகழ்வுகளில் ஆலையடிவேம்பிற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு கடந்த 17-04-2015, வெள்ளிக்கிழமை பி.ப. 3.00 மணிக்கு ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக திட்டமிடல் பிரிவும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்விற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.முனவ்வரின் அழைப்பின்பேரில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீனும், சிறப்பு அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனும் கலந்து சிறப்பித்தார்கள்.
முதற்கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தின் 7 கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 119 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இதன்போது போஷணைப் பொருட்கள் அடங்கிய பொதிகள் அதிதிகளால் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டன. இப்பொதிகளில் அரிசி, சிவப்புப் பருப்பு, சோயா, டின்மீன், முட்டை, நெத்தலிக் கருவாடு, குரக்கன், நிலக்கடலை, உழுந்து, கௌப்பி மற்றும் கடலை என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், இவற்றுக்கு மேலதிகமாக குறித்த கர்ப்பிணித் தாய்மார்கள் பச்சைக் கீரைவகை மற்றும் தூய பசும்பால் என்பவற்றையும் தமது அன்றாட உணவோடு அவசியம் சேர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஆலையடிவேம்பு பிரதேசத்தின் ஏனைய கிராமசேவகர் 15 பிரிவுகளைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷணைப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கும் நிகழ்வுகள் கடந்த 18-04-2015, சனிக்கிழமை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்ததோடு மொத்தமாக 246 கர்ப்பவதிகள் இப்பொதிகளைப் பெற்றுக்கொண்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment