கிழக்கு மாகாண விளையாட்டலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய இவ்வருடத்திற்கான ஆலையடிவேம்பு பிரதேசமட்ட விளையாட்டுப்போட்டிகளின் தொடர்ச்சியாக, உதைபந்தாட்டப்போட்டியின் மாபெரும் இறுதிப்போட்டி கடந்த 17-04-2015, வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிஷந்தனின் ஏற்பாட்டில் கோளாவில் – 2, அமரர் தியாகப்பன் – பாலாத்தை ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் ஆலையடிவேம்பு உதயம் அணியும், கண்ணகிகிராமம் கனகர் அணியும் மோதிய இந்த இறுதிப்போட்டிக்குப் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனும், சிறப்பு அதிதியாக அம்பாறை மாவட்ட உதவி விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.சப்றி நசாரும் கலந்து சிறப்பித்தனர்.
தேசியக்கொடியேற்றல், வீரர்கள் அறிமுக வைபவங்களைத் தொடர்ந்து ஆரம்பம் முதல் இறுதிவரை மிக விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இடம்பெற்ற இப்போட்டியில் ஆலையடிவேம்பு உதயம் அணி 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபாரமாக ஆடி வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது.
போட்டியினைத் தொடர்ந்து இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தில் உரையாற்றிய அதிதிகள் இரண்டு அணி வீரர்களது திறமையையும் மைதான ஒழுக்கத்தையும் பாராட்டிப் பேசியதோடு, பிரதேச செயலாளர் உதயம் அணியினருக்கு வெற்றிக்கிண்ணத்தை வழங்கிவைத்தார். இதன்போது உதைபந்தாட்டப் பயிற்சிகளுக்கான அடிப்படை வசதிகள் மிகக்குறைந்த நிலையிலும் தமது அதீத திறமையால் இறுதிப்போட்டிவரை முன்னேறிய கண்ணகிகிராமம் கனகர் அணி வீரர்களைப் பாராட்டியதுடன், அவர்களுக்கான குறிப்பிட்ட சில வசதிகள் விரைவில் செய்து தரப்படும் எனவும் உறுதியளித்தார்.
இப்பரிசளிப்பு வைபவத்தில் நடைபெற்றுமுடிந்த ஆலையடிவேம்பு பிரதேசமட்ட போட்டிகளில் மென்பந்து கிரிக்கட் போட்டிகளில் சாம்பியனான யங்க் பிளவர்ஸ் கழகம், கரப்பந்தாட்டம் மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் சாம்பியனான ஜொலி போய்ஸ் கழகம் மற்றும் எல்லே போட்டிகளில் சாம்பியனான கனகர் கழகம் என்பனவற்றின் தலைவர்கள் தமது அணிக்கான வெற்றிக்கிண்ணங்களை அதிதிகளிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
Regards,
No comments:
Post a Comment