ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனின் பரிந்துரையின் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பாடசாலைமட்ட விழிப்புணர்வு வேலைத்திட்டமானது கடந்த வாரம் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயம், கண்ணகிகிராமம் கண்ணகி வித்தியாலயம் மற்றும் ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வுகளில் குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் தலைமையில் தரம் – 9,10 ஆகியவற்றைச் சேர்ந்த 100 மாணவ, மாணவியர்கள் பங்குபற்றினர். மூன்று மணித்தியாலங்கள் வீதம் நடாத்தப்பட்ட இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்குகளில் சிறுவர் உரிமைகள், சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்களை வேலைக்கமர்த்துதல், சிறுவர் பாதுகாப்பு என்பன தொடர்பான கருத்தாடல்கள், சட்ட வரையறைகள் குறித்த விளக்கங்கள் மற்றும் சமுகமட்டத் தேவைப்பாடுகள் என்பன தொடர்பாகக் கலந்துகொண்ட மாணவ, மாணவியர்களிடையே தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன் அவை தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வுகளை ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவைச் சேர்ந்த முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.நிசாந்தினி, சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி. யசோதா கபிலன் மற்றும் சிறுவர் நன்னடத்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.ஏ.வஸீம் ஆகியோர் இணைந்து நடாத்தியதுடன், கண்ணகிகிராமம் – 2 இற்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சங்கீதனும் பங்குபற்றியிருந்தார்.
No comments:
Post a Comment