Wednesday, 18 June 2014

வீதிகளில் டயர்களை போட்டு தடைகளை ஏற்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது


அளுத்கம, பேருவளை, தர்ஹாநகர் உள்ளிட்ட பிரதேசங்களில்; முஸ்லிம்கள் மீது பேரினவாதிகள் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் இன்று செவ்வாய்க்கிழமை (17) அனுஷ்டிக்கப்பட்டுவரும் ஹர்த்தாலை முன்னிட்டு வீதிகளில் டயர்களை போட்டு தடைகளை ஏற்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.



ஹர்த்தால் செய்வோம் சர்வதேசத்தை திரும்பி பார்க்க செய்வோம் எனும் தலைப்பிலான துண்டு பிரசுரம மூலமாக ஹர்த்தாலுக்கு அழைப்பு விடப்பட்டது. இதனையடுத்து திங்கட்கிழமை(16) இரவு 10 மணியளவில் அக்கரைப்பற்று - அம்பாறை வீதியில் உள்ள அரசடி, குடியிருப்பு பகுதிகளில், வீதியின் குறுக்கே டயர்கள் போடப்பட்டு எரியூட்டப்பட்டதாகவும் அதனை அகற்றிய பொலிஸார் வீதி ரோந்து பணிகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வீதித்தடைகளை ஏற்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளகள்; இரண்டினையும் துவிச்சக்கரவண்டி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 இதனையடுத்து, இராணுவம் வரவழைக்கப்பட்டு முக்கியமான இடங்களில்; பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று  காலை அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள், கடைகள் மற்றும் பாடசாலைகள்  மூடப்பட்டு  மின்சார தூண்களில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு ஹர்த்தால் நடைபெற்றுள்ளது.

இதன் காரணமாக வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன்  வீதிகளில் இராணுவம் மற்றும் விஷேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

No comments: