Friday, 27 June 2014

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணி மீளாய்வுக் கூட்டம்

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பணி மீளாய்வுக் கூட்டமானது கடந்த 25-06-2014, புதன்கிழமை பி.ப.3.00 மணிக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.

உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.திலகராணி கிருபைராஜா அவர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஒவ்வொரு உத்தியோகத்தரதும் கடமைகள், பணிகளை நிறைவேற்றுவதிலுள்ள இடர்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் அப்பணிகளைத் தொடர்ச்சியாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளும் அறிவுரைகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உகந்தை முருகன் ஆலய வளாக சிரமதானம்

கிழக்கிலங்கையில் வரலாற்றுப் பிரசித்திபெற்ற உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் வருடந்தோறும் அதன் திருவிழாக்காலத்திற்கு முன்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்படும் சிரமதான வேலைத்திட்டமும் விசேட பூஜை வழிபாடுகளும் இம்முறை வார இறுதி நாட்களான கடந்த (ஜூன்) 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது சுமார் 100 பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இச்சிரமதானப் பணியில் பங்குபற்றியதுடன் சனி, ஞாயிறு இரு தினங்களிலும் உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் தொடர்ச்சியான சிரமதான வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் ஆலய பிரதம குருக்களால் 14 ஆந்திகதி இரவு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் விசேட பூஜை வழிபாடுகள் பிரதேச செயலாளரின் தலைமையில் நிறைவேற்றப்பட்டதுடன் அன்றைய தினம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பொங்கல் மற்றும் பஜனை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இவற்றில் இம்முறை கதிர்காமத்திற்கான புனித யாத்திரையை மேற்கொள்ளும் யாத்திரிகர்களும் பெருமளவில் பங்கெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
 — at Okanda

ஆலையடிவேம்பில் வீதிகளுக்குக் கொங்கிறீற் இடும் வேலைகள் ஆரம்பம்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அம்பாறை மாவட்டம் முழுவதும் கடந்த ஜூன் 18 முதல் எதிர்வரும் ஜூன் 25 வரை அனுஸ்டிக்கப்படுகின்ற அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பில் இதுவரையில் புனரமைக்கப்படாதுள்ள கிறவல் வீதிகளுக்கு கொங்கிறீற் இடும்வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம் கடந்த வெள்ளிக்கிழமை (20-06-2014) அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தலைமையில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ரி.கிருபைராஜா உட்பட கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள செல்லப்பிள்ளையார் வீதி, விகாரை வீதி மற்றும் அக்கரைப்பற்று – 7/3, அக்கரைப்பற்று – 7/4 கிராமப் பிரிவுகளுக்கான பொது வீதி என்பவற்றுக்கு கொங்கிறீற் இடும் வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

Friday, 20 June 2014

கடலில்மூழ்கி இறந்த வாலிபனின் சடலம் சாய்ந்தமருது கடலில்


கடந்த புதனன்று  கல்முனை கடலில் குளித்து மூழ்கிய   தமிழ் வாலிபனின் சடலம் நேற்று வியாழக்கிழமை காலை சாய்ந்தமருது கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தது. விடயமறிந்த  முஸ்லிம் மீனவர்கள் காரைதீவிலுள்ள மீனவர் சங்க பிரதிநிதி கே . ஜெயசிறிலுக்கு தெரிவிக்கவே அவர் குடும்பத்தாருடன் தொடர்புகொண்டு சடலத்தை கரைக்கு கொண்டுசேர்த்தனர். அவரதுசடலம் உறவினரிடம் ஒப்படைக்ககப்பட்டுள்ளது.
பாண்டிருப்பைச்சேர்ந்த லோகநாதன்  ஜெனி லோசன் (20) என்பவரே இவ்விதம் கடலில்மூழ்கி இறந்தவராவார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது

 கடலில் மூழ்கிய சம்பவம்  கடந்த புதன்  பகல் இடம் பெற்றுள்ளது . கல்முனை பாண்டிருப்பை  சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியாரும் மற்றும் பெரிய நீலாவணை பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை  சேர்ந்த   இரு  தமிழ் சகோதர்களும் கல்முனை  ஐஸ் வாடி கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்த வேளை  இளைய சகோதரன் லோகநாதன்  ஜெனி லோசன் (20) கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார் . காணாமல் போன சகோதரனை  தேடிய  மூத்த சகோதரனான  லோகநாதன் தேவநேசன் (21) என்பவரும்  பாதிரியாரும்  கல்முனை பொலிசில்  முறைப்பாடு செய்திருந்தனர் .




Wednesday, 18 June 2014

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிமீது கல்வீச்சு


முல்லைத்தீவில் இருந்து அக்கரைப்பற்றுக்கு சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிமீது நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் அட்டாளைச்சேனை பாலமுனை பிரதேசத்தில் வைத்து சில விஷமிகளால் கற்கள் வீசப்பட்டதாகவும் இதன் காரணமாக பஸ்வண்டியின்  கண்ணாடிகள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்முனையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு இன்று சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மற்றுமொரு பஸ் வண்டி மீது இன்று(17) காலை அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக்கு முன்னால் கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றதாகவும் இதனால் பஸ்வண்டியின்; கண்ணாடிகள் சேதமடைநதாலும்; பயணிகளுக்கு எதுவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர.

சுவிட்சர்லாந்து சென் மார்க்ரெத்தன் நகரில் இடம்பெற்ற ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி அலங்காரத் திருவிழா மற்றும் உலக முருக பக்தி மாநாடு




(சிவம்)
சுவிட்சர்லாந்து சென் மார்க்ரெத்தன் நகரில் அண்மையில் இடம்பெற்ற ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி அலங்காரத் திருவிழா மற்றும் உலக முருக பக்தி மாநாடு என்பவற்றில் மனித நேய சேவைகள் புரிந்தமைக்காக பரசுராமன் துரைசிங்கத்திற்கு மாண்புறும் மனிதராக கௌரவமளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் ஓய்வு பெற்ற கூட்டுறவுச் சங்க முகாமையாளரும், கிராமோதய சபைத்; தலைவரும், சமூக ஆர்வலருமான பரசுராமன் திருமஞ்சணம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வன் துரைசிங்கம் சுவிட்சர்லாந்தில் மாண்புறும் மகனான நேசிக்கப்பட்டார்.

சென் மார்க்கிரெத்தன் ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலய தீர்;த்தோற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 15 ) நிறைவு பெற்றதன் பின்னர் அறங்காவலர் சபைத் தலைவர் வேலுப்பிள்ளை கணேசகுமார் அவர்களினால் பரசுராமன் துரைசிங்கத்திற்கு இக்கௌரவம் அளிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.



வீதிகளில் டயர்களை போட்டு தடைகளை ஏற்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது


அளுத்கம, பேருவளை, தர்ஹாநகர் உள்ளிட்ட பிரதேசங்களில்; முஸ்லிம்கள் மீது பேரினவாதிகள் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் இன்று செவ்வாய்க்கிழமை (17) அனுஷ்டிக்கப்பட்டுவரும் ஹர்த்தாலை முன்னிட்டு வீதிகளில் டயர்களை போட்டு தடைகளை ஏற்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.



ஹர்த்தால் செய்வோம் சர்வதேசத்தை திரும்பி பார்க்க செய்வோம் எனும் தலைப்பிலான துண்டு பிரசுரம மூலமாக ஹர்த்தாலுக்கு அழைப்பு விடப்பட்டது. இதனையடுத்து திங்கட்கிழமை(16) இரவு 10 மணியளவில் அக்கரைப்பற்று - அம்பாறை வீதியில் உள்ள அரசடி, குடியிருப்பு பகுதிகளில், வீதியின் குறுக்கே டயர்கள் போடப்பட்டு எரியூட்டப்பட்டதாகவும் அதனை அகற்றிய பொலிஸார் வீதி ரோந்து பணிகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வீதித்தடைகளை ஏற்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளகள்; இரண்டினையும் துவிச்சக்கரவண்டி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 இதனையடுத்து, இராணுவம் வரவழைக்கப்பட்டு முக்கியமான இடங்களில்; பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று  காலை அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள், கடைகள் மற்றும் பாடசாலைகள்  மூடப்பட்டு  மின்சார தூண்களில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு ஹர்த்தால் நடைபெற்றுள்ளது.

இதன் காரணமாக வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன்  வீதிகளில் இராணுவம் மற்றும் விஷேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு துண்டுப் பிரசுரம்





அளுத்கம தர்ஹா நகர் மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை கண்டித்து செவ்வாய்கிழமை ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு கோரி வாழைச்சேனை, ஓட்டமாவடி பகுதியில் துண்டுப் பிரசுரம் செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் மீதான அடக்கு முறைகளையும், தாக்குதல்களையும் வன்மையாக கண்டித்தல் என்னும் தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரமானது காத்தான்குடி சகல பிரதேசங்களையும் உள்ளடக்கிய முஸ்லிம் ஒன்றியம் என பெயர் குறிப்பிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.


இத்துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளதாவது!

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நடந்த கொடூர யுத்தத்தில் பல இழப்புக்களை சந்தித்த எமது முஸ்லிம் சமூகத்திற்கு தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மகிந்த அரசு யுத்தத்தை 
முடித்து இந்நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி யுத்தத்தின் பின் நாட்டில் இன, மத பேதம் எதுவுமில்லை என்று மக்களிடம் வாக்குறுதி அளித்த போது முஸ்லிம்கள் நிம்மதிப் பெருமூச்சு 
விட்டனர்.

ஆனால் கடந்த சில வருடங்களாக எமது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சிங்கள தீவிரவாத காடையர்களால் நடாத்தப்படும் அடக்கு முறைகளும், வன்முறைகளையும் பார்க்கும் போது இந்த யுத்தம் ஏன்? முடிவுக்கு வந்தது என எண்ணத் தோணுகின்றது.

இந்த அடக்கு முறை மற்றும் வன்முறைகளின் உச்ச கட்டம் தான் கடந்த 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் எமது முஸ்லிம் சமூகம் செறிந்து வாழும் பேருவளை, தர்கா டவுன் போன்ற பிரதேசங்களில் சிங்கள காடையர்கள் தங்களது காட்டுமிராண்டித் தாக்குதல்களை அரங்கேற்றி உள்ளதுடன், தற்பொழுது வரைக்கும் அங்கு ஒரு பதற்றமான சூழ்நிலைகாணப்பட்டு வருகின்றது.

சிங்கள காடையர்களின் தாக்குதல் காரணமாக இதுவரைக்கும் 25 வயதிற்குட்பட்ட எமது 07 முஸ்லிம் இளைஞர்கள் வபாத்தாகியுள்ளனர். (இன்னாலில்லாஹிவஇன்னா இலைஹி ராஜிஊன்) சுமார் 10க்கு மேற்பட்ட கடைகள் தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. காயப்பட்ட எமது சகோதர்களை வைத்தியசாலைக்கு கூட கொண்டு செல்ல முடியாத நிலை அங்கு காணப்படுகின்றது.

இந்த காட்டுமிராண்டி தாக்குதல் சம்பவத்திற்கு முழுக்காரணமும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வழிகாட்டலில் இயங்கும் பொதுபல சேனா என்ற ஒரு தரங்கெட்ட 
தீவிரவாத அமைப்பாகும்.

அன்பின் சகோதரர்களே! பாதிக்கப்பட்டிருப்பது எமது சமூகம் லாஹிலாஹ இல்லல்லாஹ{ முஹம்மதர்ரஸ{லுல்லாஹ் என்ற புனித திருக்கலிமாவை மொழிந்து முஸ்லிம்களான வாழ்ந்ததற்காகவே இவர்கள் மீது மிலேச்சத்தனமாக சம்பவம் நடந்தேறியுள்ளது.

தற்பொழுது அவர்களுக்கு நடந்து கொண்டிருக்கும் இத்தாக்குதல் நாளை வேறு ஒரு முஸ்லிம் பிரதேசத்திலும் ஏன்? எமது பிரதேசத்திலும் ஏற்படலாம்.

கேவலம்! இந்த நிமிடம் வரைக்கும் எந்த ஒரு முஸ்லிம் அரசியல் வாதியும் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட எமது சகோதர்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தை கூட கூறவில்லை. காரணம் எமது அரசியல் வாதிகளுக்குத் தெரியும் இது அரசாங்கத்தின் ஆதரவுடன் நடக்கும் ஒரு வன்முறை இதில் நாம் தலையிட்டால் எமது அமைச்சுக் கதிரைகள் 
ஆட்டங்கண்டு விடுமென்ற கேவலாமான குறுகிய சிந்தனையாகும்.

அன்பின் சகோதரர்களே! இனிமேலும் இந்த கைகாலாகாத முஸ்லிம் அரசியல் தலைமைகள் என்று சொல்லிக் கொண்டிருபவர்களை நம்பாமல் எமது முழு நம்பிக்கையையும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீது வைத்தவர்களாக அவனிடமே நாம் அனைவரும் பிராத்திப்போம்.

பாதிக்கப்பட்ட எமது முஸ்லிம் சமூகத்திற்காகவும், இந்த கட்டுமிராண்டித் தாக்குதல்களை நடாத்திய சிங்கள காடையர்களை கண்டித்தும் இந்த சம்பவத்தின் பின்னணியில் 
உள்ளவர்களை (இரட்டை நாடகமாடுவதை கைவிட்டு) அரசாங்கம் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், செவ்வாய்கிழமை எமது வர்த்தக ஸ்தாபனங்களையும். அரச, அரசசார்பற்ற 
நிறுவனங்கள் அனைத்தும் மூடி பூரண கர்த்தால் ஒன்றை அணுஷ்டித்து ஒத்துழைப்பு வழங்குமாறு அல்லாஹ்வின் பெயரால் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் என இத்துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளது.





Tuesday, 17 June 2014

அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ் மீது மன்னம்பிட்டியில் வைத்து தாக்குதல்


அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சில் பயணம் செய்தவர்கள் மீது மன்னம்பிட்டியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை இரவு 9.30 அளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அக்கரைப்பற்றில் இருந்து மட்டக்களப்பு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்மீது மன்னம்பிட்டியில் வைத்து ஒருவர் கற்களினால் தாக்குதல் நடத்தி பஸ்ஸின் கண்ணாடிகளை உடைத்துள்ளார்.

இதன்போது பஸ்ஸின் நடத்துனருடன் பொதுமக்களும் இணைந்து குறித்த நபரை பிடித்து தாக்கியுள்ளனர்.

இந்தவேளையில் அப்பகுதியில் ஒன்றுகூடிய 25க்கும் மேற்பட்டவர்கள் குறித்த பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிலர் அடிகாயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் குறித்த பஸ்சில் பயணம் செய்தவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கதுறுவெல பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகன அனு­ம­திப்­பத்­தி ரம் இன்றி வாகனம் செலுத்­திய நபர்


மதுபோதையில் வாகன அனு­ம­திப்­பத்­தி ரம் இன்றி வாகனம் செலுத்­திய நபர் ஒரு­ வருக்கு 11,000ரூபா தண்­டப்­ப­ணமும், 15 நாட்கள் கடூ­ழிய சிறைத் தண்­ட­னையும் வழங்கி அக்­க­ரைப்­பற்று நீதவான் நீதி­மன்ற நீதி­பதி எச்.எம்.எம்.பஸீல் தீர்ப்­ப­ளித்­துள் ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது,
அக்­க­ரைப்­பற்று பனங்­காடு பிர­தே­சத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மது போதையில் சாரதி அனு­ம­திப்­பத்­திரம் இல்­லாமல் மோட்டார் சைக்­கிளை செலுத்திச் சென்ற போது வீதி ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்த போக்­கு­வ­ரத்து பொலிஸார் கடந்த வியா­ழக்­கி­ழமை பிற்­பகல் குறித்த சந்­தேக நபரைக் கைது செய்­தனர்.
கைது செய்­யப்­பட்ட நபர் மறுநாள் வெள்­ளிக்­கி­ழமை அக்­க­ரைப்­பற்று நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது நீதி வான் எச்.எம்.எம்.பஸீல் சாரதி அனு­மதி பத்­திரம் இல்­லா­த­தற்கு மூவா­யி­ரத்து ஐந்­நூறு ரூபாவும், மது­பானம் அருந்­தி­யி­ருந்­த­த ற்­காக ஏழா­யி­ரத்து ஐந்­நூறு ரூபாவும் அப­ரா ­த­மாக செலுத்­து­மாறு உத்­த­ர­விட்­ட­துடன் 15 நாட்கள் கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையும் விதி த்து தீர்ப்­ப­ளித்தார்.
அக்­க­ரைப்­பற்று, ஆலை­ய­டி­வேம்பு, சாகாமம் வீதியால் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றபோதே அக்கரைப்பற்று பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் கைது செய்து மன்றில் ஆஜர்படுத்தினர்.

அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சமுக ஒருங்கிசைவு நிகழ்வு


(சித்தா)
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விளையாட்டு மற்றும் கலாசார முன்னெடுப்புகளின் ஊடாக சமுக ஒருங்கிசைவு நிகழ்வு யுனிசெவ் அணுசரனையுடன் அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி ஜனாப் எம்.எச்.பஸீல் அழைக்கப்பட்டிருந்தார். சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
கொய்கா திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலைகளுக்pடையிலான விழாவாக இது காணப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பட்டிருப்பு, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு, அம்பாரை, கல்குடா, திருக்கோவில் கல்வி வலயங்களிலிருந்து மாணவர்கள் இவ் விழாவில் பங்கேற்றனர். சிறுவர்களுக்கான சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகள் கலாசார நிகழ்வுகள் என சமுகத்தினை ஒருங்கிணைக்கக் கூடிய விழாவாக இந் நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்தது.இவ் அனைத்து நிகழ்வுகளையும் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக யுனிசெவ் இணைப்பாளர் ஜனாப் எம்.எம்.ஜெமீல் அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்








பெண்ணொருவர் மீது பாலியல் சேஷ்ட்டை


அம்பாறை நகரலிருந்து நாமல் ஓயாவுக்கு பஸ்ஸில் பயணித்துகொண்டிருந்த பெண்ணொருவர் மீது பாலியல் சேஷ்ட்டை புரிந்ததாக கூறப்படும் 22 வயது இளைஞரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஹேமந்த பெரேரா புதன்கிழமை(11) உத்தரவிட்டார்.

சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞருக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இளைஞர், பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரை உரசியவாறு பயணித்துள்ளார். இவரது சேஷ்ட்டையை தாங்க முடியாத அப் பெண் இங்கினியாகலை பிரதேசத்தில் வைத்து கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்தே குறித்த இளைஞனை பிடித்த பயணிகள் அவரை நயப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


இச்சம்பவத்தில் கைதானவரை அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஹேமந்த பெரேரா முன்னிலையில் அம்பாறை பொலிஸார் ஆஜர்படுத்தியப்போது இவரை எதிர்வரும 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குரு பெயர்ச்சி


திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவானுக்கு உகந்த குரு வாரமே (வியாழக்கிழமை) குரு பெயர்ச்சியாகிறது. இதனை விசேஷமானதாகவே கருத வேண்டும். 

கடகத்தில் உச்சம் பெற்ற குரு, நன்மை செய்ய தயங்க மாட்டார். கடகத்தில் இருக்கும் குருவை, சனி 10-ம் பார்வையாக பார்ப்பதால், நாட்டு மக்களுக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆலயங்கள் புதுபிக்கப்படும். தொழில் கூடங்கள் நல்ல லாபகரமாக நடக்க ஏதுவாகும்.


ஒருவரின் ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷங்களையும் தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர் குரு பகவான். “குரு பார்க்க கோடி புண்ணியம்” என்பார்கள். குரு பகவான் நம்மை பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடி சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான். உங்கள் வீட்டின் அருகேயே இருக்கும் ஆலயத்தில், நவகிரக சந்நதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வணங்கலாம். மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வணங்கினால் மலையளவு உள்ள துயரம் கடுகளவாக குறைந்து விடுவதுடன் மட்டுமல்லாமல், குரு பகவானின் பரிபூரண அருளாசியும், நன்மைகளும் தேடி வரும். துன்பங்கள் நீங்கி இன்பங்களை பெறலாம்.

துர்க்காதேவி சேதிடர் . வி.ஜி.கிருஸ்ணாராவ்









                                 




சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தைச் சிறப்பிக்கும் மரநடுகையும் வைபவமும்

கடந்த ஜூன் 5 ஆந்திகதி இலங்கை உட்பட சர்வதேச ரீதியாக அனுஸ்டிக்கப்பட்ட சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தைச் சிறப்பிக்கும் வகையிலான விசேட வைபவமும் மரநடுகையும் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள இராம கிருஸ்ண மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று, 10-06-2014 செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றன.

அம்பாறை மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஏற்பாடு செய்யப்பட்டு ஆலையடிவேம்பு பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.இர்பான் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவங்களில் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்து சிறப்பித்ததுடன், விசேட அதிதியாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் எஸ்.உதயராஜாவும், சிறப்பு அதிதிகளாக இராம கிருஸ்ண மத்திய மகா வித்தியாலய அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம், ஆலையடிவேம்பு பிரதேச அரசுசாரா நிறுவனங்களுக்கான இணையத்தின் தவிசாளர் வி.பரமசிங்கம், அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரியின் பிரதியதிபர் எஸ்.லோகநாதன் மற்றும் அட்டாளைச்சேனைப் பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் ஜெமீல் ஆகியோரும் குறித்த பாடசாலை மாணவ மாணவியரும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பாடசாலை வளாகத்தில் மரநடுகையுடன் ஆரம்பமான இந்நிகழ்வுகளில் பிரதேச செயலாளரும் சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தரும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டிவைத்தனர். அதனைத்தொடர்ந்து தேசிய சுற்றாடல் கீதத்துடன் ஆரம்பமான உலக சுற்றாடல் தின விசேட வைபவத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வினை அடிப்படையாகக்கொண்ட மாணவர்களின் பேச்சுக்கள் இடம்பெற்றதுடன் அதிதிகளின் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

இறுதியாக அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரியின் பிரதியதிபர் மற்றும் இராம கிருஸ்ண மத்திய மகா வித்தியாலய அதிபர் ஆகியோருக்கு மரக்கன்றுகளைக் கையளிக்கும் நிகழ்வுடன் வைபவங்கள் நிறைவுற்றன.

குறித்த சர்வதேச சுற்றுச்சூழல் தின நிகழ்வுகளுக்கான அனுசரணையை ஆலையடிவேம்பு பிரதேச அரசுசாரா நிறுவனங்களுக்கான இணையம் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.