Sunday, 9 December 2018

அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு


அனர்த்தங்களின் போது வைத்தியசாலை அனர்த்த முகாமைத்துவக் குழுக்களின் செயற்பாடுகள் குறித்து வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு (7) (வெள்ளிக்கிழமை) பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.


பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் கல்முனை பிராந்திய அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ரீ.எம்.மர்சூக் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, அனர்த்த முகாமைத்துவ பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ரீ.எம்.மர்சூக் அனர்த்தங்கள் தொடர்பாகவும், அனர்த்தங்களின் போது வைத்தியசாலை அனர்த்த முகாமைத்துவக் குழுக்களின் செயற்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் உரையாற்றுகையில்,

அனர்த்தங்கள் என்பது எதிர்பாராத விதமாக இடம்பெறுகின்ற ஒரு நிகழ்வாகும். இது இயற்கையாகவும், செயற்கையாகவும் பல்வேறு விதத்தில் இடம்பெறுகின்றது. இதனால் மக்கள் உயிர், உடமைகள் என பல்வேறு இழப்புக்களை சந்திக்கின்றனர். எவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டாலும், அனர்த்தத்தின் போது உடல், உள ரீதியாக பாதிக்கப்படுகின்ற மக்கள் முதலில் வைத்தியசாலையையே நாடி வருகின்றனர். அவர்களை பாதுகாத்து முறைாக சிகிச்சையளிப்பது சுகாதார துறையினரின் கடமையாகும். அதனாலே தான் அனர்த்த முகாமைத்துவத்தில் சுகாதாரத்துறை முக்கிய பங்கு வகிக்கின்றது.

பொத்துவில் பிரதேசத்திலும் கடந்த காலங்களில் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பிரதேசத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்கும் ஒரு இடமாக பொத்துவில் ஆதார வைத்தியசாலை மாத்திரமே திகழ்கின்றது. எனவே இந்த வைத்தியசாலையில் உள்ள அனர்த்த முகாமைத்துவ குழு முறையான பயிற்சிகளை பெற்று தயார் நிலையில் இருக்க வேண்டும். அதற்காகவே இவ்வாறான நிகழ்வுகளை நாடாத்தி பயிற்சிகளை வழங்கி வருகின்றோம்.

குறிப்பாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கு அனர்த்த பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வருகின்றோம். அத்துடன் அதற்கென நிதியுதவிகளையும் செய்து வருகின்றோம். அனர்த்தங்கள் இப்போது அடிக்கடி இடம்பெறுகின்றன. ஆகவே, அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக அனைவரும் அறிந்திருப்பது காலத்தின் தேவையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.





No comments: