Wednesday, 3 January 2018

ஆலையடிவேம்பில் தாயை இழந்த பாலகிக்கு தனவந்தர் ஒருவர் உதவி


அண்மையில் தனது தாயைப் பறிகொடுத்த ஒன்றரை வயதுக் குழந்தையொன்றுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றீடான பால்மாப் பக்கற்றுகளும் மாற்று உணவுப் பொருட்களும் தனவந்தர் ஒருவரால் மனிதாபிமான அடிப்படையில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (03) காலை இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேசத்தைத் தனது பூர்வீகமாகக் கொண்ட, தொழில் நிமித்தம் தற்போது தலைநகர் கொழும்பில் வசிக்கும் குடும்பமொன்றைச் சேர்ந்த கணேசானந்தம் நிரோஷன் என்ற தனவந்தரால் கொள்வனவு செய்யப்பட்ட இப்பொருட்கள் குறித்த குழந்தையின் பாட்டியிடம் இதன்போது கையளிக்கப்பட்டன.

தலைநகரில் பிரசித்திபெற்ற தனியார் வைத்திசாலையான லங்கா ஹொஸ்பிட்டலில் வைத்தியராகப் பணிபுரியும் குறித்த தனவந்தர் புகைப்படத்துக்கு முகம்காட்ட விரும்பாதநிலையில், விருப்பத்திற்கிணங்க ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸனால் குறித்த குழந்தைகளுக்கான பால்மாப் பக்கற்றுகளும் மாற்று உணவுப்பொருட்களும் அங்கே கையளிக்கப்பட்டன.

இதன்போது குறித்த குழந்தைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ முன்வந்த அவ்வைத்தியருக்கு பிரதேச செயலாளரும், அக்குழந்தையின் குடும்பத்தினரும் தமது நன்றிகளைத் தெரிவித்திருந்தனர். மேலும் இவரது உடன்பிறந்த சகோதரர் ஒருவரும் தலைநகரில் விசேட வைத்திய நிபுணராகப் பணிபுரிகின்றமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.






No comments: