Tuesday, 16 January 2018

வேட்பாளர் உட்பட மூவர் தாக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில்

haran
வாழைச்சேனை – செம்மண்ணோடை பகுதியில் நேற்று  (செவ்வாய்க்கிழமை) இரு கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில், உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் உட்பட மூவர் தாக்கப்பட்ட நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ‘குறித்த பிரதேசத்தில் வடிகான்களை வாழைச்சேனை பிரதேசசபை வாகனத்தை கொண்டு சுத்திகரிப்பு செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்த போது, அந்த இடத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் ஐக்கிய தேசிய முன்ணியில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் செம்மண்ணோடை வட்டார தலைவர் ஆகிய இருவரும் சென்றனர்.

இதனையடுத்து, எமது கட்சியின் ஊடாக, பிரதேச சபையில் இருந்து வாகனத்தை கொண்டு வந்து, நாங்கள் சுத்திகரிப்பு வேலை செய்கின்றோம். நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செம்மண்ணோடை வட்டார வேட்பாளரின் ஆதரவாளர்கள் கேட்டதில் இரு தரப்பினருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றியதில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் சீமெந்து கல்லால் தலையில் தாக்கியதாகவும், அதனை தடுக்க முற்பட்ட வேட்பாளரும் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்தநிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கும் இதனால் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற முதலாவது தேர்தல் வன்முறையாக பதிவாகியுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: