ஆலையடிவேம்பு
பிரதேச செயலகத்தின் இவ்வருடத்திற்கான சித்திரைப் புதுவருட விளையாட்டுப்போட்டிகளில்
இரண்டாவது போட்டியான சைக்கிளோட்டம் இன்று, 28-04-2017 வெள்ளிக்கிழமை காலை 7.00
மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.
முதலாவது
போட்டியான மரதன் ஓட்டத்தைத் தொடர்ந்து சாகாம வீதியின் பிரதேச செயலக
முன்றலிலிருந்து ஆரம்பமான இப்போட்டி நிகழ்வை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும்,
சித்திரைப் புதுவருட விளையாட்டுப் போட்டிக்குழுவின் தலைவருமான வி.ஜெகதீஸன் கொடியசைத்துத்
தொடங்கிவைத்தார்.
ஐந்து வீரர்கள்
பங்குபற்றிய குறித்த சைகிளோட்டப் போட்டியானது சாகாம வீதி வழியாக பனங்காடு
தில்லையாற்றுப் பாலம், சிப்பித்திடல் மயானம், புட்டம்பைச் சந்தி, நீத்தையாற்றுப்
பாலம், கூளாவடிச் சந்தி, சாகாம இராணுவ முகாம் என்பனவற்றைக் கடந்து காஞ்சிரங்குடா
சந்தியை அடைந்து, பின் அக்கரைப்பற்று நோக்கிய பொத்துவில் வீதி வழியாக விநாயகபுரம்
பஸ் தரிப்பிடம், திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரம், களுதாவளைப் பிள்ளையார் கோவில், தம்பட்டை முருகன் கோவில், அக்கரைப்பற்று
இராணுவ முகாம் ஆகியவற்றைக் கடந்து அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரம் சென்று
வலதுபக்கமாகக் கல்முனை வீதிக்குத் திரும்பி, அட்டாளைச்சேனை, ஒலுவில், நிந்தவூர்
கடந்து காரைதீவு விபுலானந்தர் சுற்றுவட்டம் வரை சென்று, மீண்டும் திரும்பி அக்கரைப்பற்று நோக்கி வந்து சாகாம வீதியை எட்டி ஆலையடிவேம்பு
பிரதேச செயலக முன்றலை வந்தடைந்து நிறைவுற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய வை.செல்வராஜா
என்ற வீரர் முதலாமிடத்தையும், முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களை எஸ்.லக்ஸரின் பல்தசார்,
கே.உதயராஜ் ஆகிய வீரர்களும் பெற்றனர்.
இப்போட்டியின்போது
பங்குபற்றிய வீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் தாகசாந்தி வழங்கும் ஏற்பாடுகளை
நாவற்காடு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.
இப்போட்டியில்
வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசுகளும் பங்குபற்றிய வீரர்களுக்கான ஆறுதல்
பரிசுகளும் இன்று (28) பிற்பகல் 2.30 மணி முதல் அக்கரைப்பற்று - 7/4, தருமசங்கரி விளையாட்டு
மைதானத்தில் நடாத்தப்படும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் இவ்வருடத்திற்கான
சித்திரைப் புதுவருட விளையாட்டுப்போட்டிகளின் முடிவில் இடம்பெறவுள்ள பரிசளிப்பு
வைபவத்தில் அதிதிகளால் வழங்கிவைக்கப்படவுள்ளன.
No comments:
Post a Comment