ஆலையடிவேம்பு
பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகள் நடாத்திய தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டு
விளையாட்டு நிகழ்வுகள் நேற்று (23) மாலை வேளையில் கோலாகலமாக இடம்பெற்றன.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்ற குறித்த தமிழ்-சிங்கள
கலாசாரப் பாரம்பரிய போட்டி நிகழ்வுகளின் பிரதம அதிதியாக தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் கலந்து
சிறப்பித்திருந்தார்.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலக கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் சமுக மேம்பாட்டு உதவிக்
குழுக்கள், இளைஞர் கழகங்கள் ஆகியவற்றின் உதவிகளோடு இடம்பெற்ற குறித்த நிகழ்வுகளில்
முதலில் ஆலையடிவேம்பு வடக்கு வலய சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி ஏற்பாடு
செய்திருந்த போட்டிகள் அக்கரைப்பற்று ஸ்ரீ தம்மரதன சிங்கள மகா வித்தியாலய
மைதானத்திலும், அதனையடுத்து ஆலையடிவேம்பு தெற்கு வலய சமுர்த்தி சமுதாய அடிப்படை
வங்கி ஏற்பாடு செய்திருந்த போட்டிகள் நாவற்காடு கிராம சேவகர் பிரிவிலுள்ள தனியார்
காணியொன்றிலும் வெகு கோலாகலமாக இடம்பெற்றிருந்தன.
குறித்த
இரு போட்டி நிகழ்வுகளையும் பிரதம அதிதியான நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன்
கோடீஸ்வரன் தேசியக் கொடியேற்றி ஆரம்பித்துவைத்திருந்தார். மங்கல விளக்கேற்றலின்
பின்னரான அதிதிகளின் உரைகளின் பின்னர் ஆரம்பமான தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டு
விளையாட்டு நிகழ்வுகளில் இளைஞர் யுவதிகள் பங்குபற்றிய தலையணைச் சமர், கண்கட்டி
முட்டியுடைத்தல், கிடுகிழைத்தல், தேங்காய் துருவுதல், கயிறிழுத்தல், முட்டை
மாற்றுதல் போன்ற கலாசாரப் பாரம்பரியம் மிக்க போட்டிகளும், பலூன் உடைத்தல்,
சாக்கோட்டம், யானைக்குக் கண் வைத்தல், வினோத உடைப் போட்டி ஆகிய சின்னஞ்சிறார்களுக்கான
போட்டிகளும் பார்வையாளர்களின் பலத்த கரகோசங்களுக்கு மத்தியில் இடம்பெற்றிருந்தன.
குறித்த
போட்டி நிகழ்ச்சிகளின் இறுதியில் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கான பரிசளிப்பு
வைபவம் அதிதிகளின் பங்குபற்றுதலோடு அங்கு இடம்பெற்றிருந்ததோடு, எதிர்வரும்
28-04-2017 வெள்ளிக்கிழமை மேலும் பிரமாண்டமாய் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் அக்கரைப்பற்று,
தருமசங்கரி மைதானத்தில் நடாத்தவுள்ள மாபெரும் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு
விழா - 2017 தொடர்பான அறிவிப்புக்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment