ஆலையடிவேம்பு
பிரதேச செயலகத்தின் இவ்வருடத்திற்கான மாபெரும் சித்திரைப் புதுவருட
விளையாட்டுப்போட்டிகள் இன்று, 28-04-2017 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு முதலாவது
போட்டியான மரதன் ஓட்டத்துடன் ஆரம்பமாயின.
சாகாம
வீதியின் பிரதேச செயலக முன்றலிலிருந்து ஆரம்பமான இப்போட்டி நிகழ்வை ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளரும், சித்திரைப் புதுவருட விளையாட்டுப் போட்டிக்குழுவின் தலைவருமான
வி.ஜெகதீஸன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
16 வீரர்கள்
பங்குபற்றிய இம் மரதன் ஓட்டப்போட்டியானது பிரதேச செயலக முன்றலில் ஆரம்பித்து
ஆலையடிவேம்பு வீதி வழியாக ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி வீதியில் திரும்பி அம்பாறை
வீதிக்குச் சென்று அதனூடாக அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரம்வரை சென்று
திரும்பி, பொத்துவில் வீதி வழியாகத் தம்பட்டை முருகன் கோவில்வரை சென்று, பின்னர்
மீண்டும் அங்கிருந்து திரும்பி பொத்துவில் வீதி வழியாக அக்கரைப்பற்று இராணுவ முகாமைக்
கடந்து பழைய வைத்தியசாலை வீதியூடாகத் திரும்பி சாகாம வீதியை அடைந்து, அங்கிருந்து
பனங்காடு தில்லையாற்றுப் பாலம் கடந்து பிள்ளையாரடிச் சந்தியிலுள்ள ஆலையடிவேம்பு
தெற்கு, சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிக்கு முன்னால் நிறைவடைந்தது. கடந்த
வருடங்களைப்போலவே இப்போட்டியிலும் பங்குபற்றிய பனங்காட்டைச் சேர்ந்த ஜி.சத்தியசீலன்
என்ற மரதன் ஓட்ட வீரர் கடந்த இரு வருடங்களைப் போலவே இம்முறையும் முதலாமிடத்தைப்
பெற்றார். இரண்டாம், மூன்றாம் இடங்களை முறையே கே.பிரதீபன், வி.விதுர்சன் ஆகிய
வீரர்கள் பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டியில்
வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசுகள் மற்றும் பங்குபற்றிய வீரர்களுக்கான ஆறுதல்
பரிசுகள் என்பன இன்று (28-04-2016) பிற்பகல் 2.30 மணி முதல் அக்கரைப்பற்று - 7/4,
தருமசங்கரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின்
இவ்வருடத்திற்கான சித்திரைப் புதுவருட விளையாட்டுப் போட்டிகளின் முடிவில் இடம்பெறவுள்ள
பரிசளிப்பு வைபவத்தில் அதிதிகளால் வழங்கிவைக்கப்படவுள்ளன.
No comments:
Post a Comment