உடல் உழைப்பைப்
புறந்தள்ளி விலையுயர்ந்த விஞ்ஞான வளர்ச்சியின் நவீன தொழில்நுட்பங்களுக்குப்
பழக்கப்படுத்திக்கொண்டு விரல் நுனிகளால் எப்போது வேலைகளைச் செய்ய ஆரம்பித்தோமோ அப்போதே
எமது உடல் ஆரோக்கியத்தை இழக்க ஆரம்பித்துவிட்டோம் என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்
வேதநாயகம் ஜெகதீஸன் தெரிவித்தார்.
இலங்கை
சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய
விளையாட்டுத்துறை அமைச்சினால் நாடுதழுவிய ரீதியில் இம்மாதம் 06 - 12 வரை ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டுத் தேசிய வாரத்தின் முதல்
நாளான இன்று (06) விசேடமாக அனுஸ்டிக்கப்படும் விளையாட்டுத்துறை மற்றும் உடல்நல
மேம்பாட்டு அரச, கூட்டுத்தாபன உத்தியோகத்தர்களின் தினத்தைச் சிறப்பிக்கும்வகையில்
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட வைபவத்துக்குத்
தலைமைதாங்கி உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர்
அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எமது வயதுகளில் எமது மூதாதையர்கள்
கொண்டிருந்த உடல் பலம் இப்போது எம்மிடமோ, எமது குழந்தைகளிடமோ இல்லை. உடலை வருத்தி
யாரும் இப்போது வேலை செய்ய விரும்புவதில்லை. உடல் வியர்ப்பதை இப்போதெல்லாம்
அசௌகரியமாகக் கருதும் சமுதாயத்தில் வாழப் பழகிவிட்டோம். இப்போது சாதாரண ஒரு காய்ச்சலைத்
தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தி எமது உடலில் இல்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள்,
இறைச்சி வகைகளை நாம் உண்ணத்தொடங்கிய நாளிலிருந்து புற்றுநோய் நமது வேண்டாத விருந்தாளியாகி
வீடுகளுக்குள் நுழைந்து நாம் வாழும் சமூகங்களின், எமது சந்ததிகளின் எதிர்காலத்தையே
கேள்விக்குறியாக்கிக்கொண்டிருக்கின்றது. இந்தநிலையை உடனடியாக மாற்றிவிட
முடியாதபோதும் படிப்படியாகவேனும் இல்லாதொழிப்பதற்கு உடற்பயிற்சிகளும் கடினமான உடல்
உழைப்புக்களும் இன்றியமையாததாக அமைந்துள்ளது. இதனாலேயே கடந்த வருடத்தைப்போன்று இவ்வருடமும்
அரசாங்கத்தினால் விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டுத் தேசிய வாரம்
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத்தினால் ஏற்பாடு
செய்யப்பட்ட குறித்த விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டுத் தேசிய வாரத்தின்
முதல்நாள் நிகழ்வான விளையாட்டுத்துறை மற்றும் உடல்நல மேம்பாட்டு அரச, கூட்டுத்தாபன
உத்தியோகத்தர்களின் தினமானது பிரதேச செயலாளரால் தேசியக்கொடியேற்றி
ஆரம்பித்துவைக்கப்பட்டது.
அதனையடுத்து
பிரதேச செயலாளர் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்
பங்குபற்றிய விசேட நடைப்பவனி பிரதேச செயலக முன்றலிலிருந்து ஆரம்பித்து, சாகாம
வீதியூடாக அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று திரும்பி, இராம கிருஸ்ண
மிசன் மகா வித்தியாலய சந்தியை அடைந்து, அங்கிருந்து ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய
கல்லூரி வீதியூடாக வம்மியடிச் சந்திக்குச் சென்று, பின் ஆலையடிவேம்பு வீதியூடாகப்
பயணித்து மீண்டும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தை வந்தடைந்திருந்தது.
அதனைத்தொடர்ந்து
பிரதம முகாமைத்துவ உதவியாளர் கே.ஹேந்திரமூர்த்தியினால் முன்னெடுக்கப்பட்ட சுமார் 15
நிமிடநேர உடற்பயிற்சிகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக ஆண், பெண் உத்தியோகத்தர்கள் அனைவரும்
பங்குபற்றியதோடு, பயிற்சியின் நிறைவில் 14 வகையான மூலிகைகள் மற்றும் இலைக்கறி
வகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கைப் போஷாக்குமிக்க இலைக்கஞ்சியானது உத்தியோகத்தர்களுக்குப்
பரிமாறப்பட்டிருந்தது.
அடுத்து அங்கு
இடம்பெற்ற பிரதேச செயலாளரின் விசேட உரையோடு உத்தியோகத்தர்கள் தங்களது
கடமைகளுக்குத் திரும்பியதுடன், குறித்த விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டுத்
தேசிய வார வேலைத்திட்டங்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த விளையாட்டு
உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத், மூன்றாம் நாளான எதிர்வரும் 08-02-2017
புதன்கிழமையன்று ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையோடு பிரதேச
செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள் பிரதேச செயலகத்தில் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment