ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தேசிய
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ‘செமட செவன - 2016’ தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின்
கீழ் சீமெந்துப் பொதிகளை இலவசமாகப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வும், அனர்த்த
முகாமைத்துவ அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ சேவை நிலையத்தினால் கடந்த வருட
இறுதியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலாம் கட்ட வெள்ள
நிவாரணக் கொடுப்பனவுகளை வழங்கிவைக்கும் நிகழ்வும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்
வி.ஜெகதீசன் தலைமையில் நேற்று (24) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர்
கூடத்தில் இடம்பெற்றன.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ சேவைகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்
ரி.தனராஜன் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப
உத்தியோகத்தர் என்.சுதர்சன் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த
இந்நிகழ்வுகளுக்குத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற
உறுப்பினர் கே.கோடீஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததோடு, தேசிய
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளர்
பி.எஸ்.கலன்சூரிய சிறப்பு அதிதியாகவும், உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன்
விசேட அதிதியாகவும் கலந்துகொண்டிருந்தனர்.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளரின் தலைமையுரையோடு ஆரம்பித்த நிகழ்வுகளில் முதலில் கடந்த வருட
இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலாம் கட்ட
வெள்ள நிவாரணக் கொடுப்பனவுகளை வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் குறித்த
அனர்த்தத்தில் தமது வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தமைக்கான கொடுப்பனவுகளை 36 பேரும்,
முழுமையாகச் சேதமடைந்தமைக்கான கொடுப்பனவுகளை 36 பேரும் அதிதிகளிடமிருந்து
பெற்றுக்கொண்டனர். இதன்போது மொத்தமாக 1,375,000.00 ரூபாய்களுக்கான காசோலைகள்
பாதிக்கப்பட்டோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.
அடுத்து
இடம்பெற்ற ‘செமட செவன - 2016’ தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் சீமெந்துப்
பொதிகளை இலவசமாகப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு
பயனாளிக்கும் தலா 10 பொதிகள் வீதம் 38 பேருக்கும், தலா 5 பொதிகள் வீதம் 4 பேருக்கும், மொத்தமாக 400 சீமெந்துப் பொதிகள் அங்கு
வழங்கிவைக்கப்பட்டன.
No comments:
Post a Comment