Tuesday, 10 May 2016

தொழிற்பயிற்சிகளூடான வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் ஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு வீதி நாடகங்கள்


அம்பாறை மாவட்ட சமுக நல்வாழ்வு அமைப்பு (SWOAD) உலக கனேடிய பல்கலைக்கழக சேவைகள் (WUSC) நிறுவனத்தின் அனுசரணையோடு ஆலையடிவேம்பு பிரதேசத்தில் முன்னெடுத்துவருகின்ற ‘வாழ்க்கைக்குத் தொழில் - தொழிலுக்குத் திறன்’ என்ற குறிக்கோளுடனான தேசிய தொழிற்தகைமைச் சான்றிதழ்களையும், அதனோடிணைந்தவகையில் உரிய துறைகளில் உடனடி வேலைவாய்ப்புகளையும் பெற்றுத்தரும் தொழிற் பயிற்சிநெறிகள் தொடர்பாக, பாடசாலைக் கல்வியை முடித்து தொழிலற்றிருக்கும் இளைஞர், யுவதிகளை அறிவூட்டும் வீதி நாடகங்கள் மூலமான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நேற்று (09) முன்னெடுக்கப்பட்டன.

சுவாட் நிறுவனத்தின் சமுக சந்தைப்படுத்தல் செயல்திட்டத்தின்கீழ் இடம்பெற்ற குறித்த வீதி நாடகங்களில் முதலாவதாக இடம்பெற்ற நிகழ்வானது, அக்கரைப்பற்று சாகாம வீதியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு அருகாமையில் இடம்பெற்றிருந்தது. உலக கனேடிய பல்கலைக்கழக சேவைகள் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எஸ்.ஜேசுசகாயம் தலைமையில் களரி அரங்கக் கலை நிதிய நாடகக் குழுவினரால் நடாத்தப்பட்ட முதலாவது விழிப்புணர்வு வீதி நாடகத்துக்கு சிறப்பு விருந்தினர்களாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த நாடகத்தின் இறுதியில் கருத்துத் தெரிவித்திருந்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், நாட்டில் உள்நாட்டுப் போர் உக்கிரமாக இடம்பெற்ற காலத்தில் கல்வியைத் தொடரமுடியாமல் தொழில் வாய்ப்புகள் எதுவுமின்றித் தவித்த வட, கிழக்கு மாகாணத் தமிழ் இளைஞர் யுவதிகளுக்குக் கட்டட நிர்மாணம், கணனி, இரும்பு உலோக உருக்கு வேலைகள் எனப் பல்வேறு துறைகளில் தொழிற் பயிற்சிநெறிகளை வழங்கி, அவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத் தமது குடும்பப் பொருளாதாரங்களை முன்னேற்றுவதில் உலக கனேடிய பல்கலைக்கழக சேவைகள் நிறுவனம் தன்னிகரற்ற சேவையாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், தற்போது எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சுவாட் நிறுவனத்தோடு இணைந்து கணனித் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை உட்பட அதிக வருமானம் உழைக்கக்கூடிய தொழிற்துறைகளில் பயிற்சிகளை வழங்கவுள்ளதோடு, அத்துறைகளில் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கவும் திட்ட முன்மொழிவினை முன்வைத்துள்ளார்கள். இந்த சந்தர்ப்பத்தை எமது பிரதேச இளைஞர், யுவதிகள் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டுமெனக் குறிப்பிட்டார்.

அதனையடுத்து மாலைநேர நிகழ்வாக அக்கரைப்பற்று தருமசங்கரி மைதானத்துக்கு அருகில் இரண்டாவது விழிப்புணர்வு வீதி நாடகம் சுவாட் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டிருந்தது.







No comments: